Friday, May 15, 2015

முள்ளிவாய்க்கால் பேய்கள் வாழும் பூமியில் இருந்து ஓர் உயிர் பேசுகிறது..

முள்ளிவாய்க்கால்
காற்றிடை வாழும்
உயிர் பேசியது..

உலோகத் துகள்களிடை
உடல் துகள்களாகி சிதறி நிற்க
காற்றுக் கூட அவதிப் பட்டது
அகதியாகி
சன்னங்களிடை தன் இடம் பிடிக்க.

இட நெருக்கடியில்
உயிர்கள் உரசிக் கொண்டன
செல்லுமிடம்
சொர்க்கமோ நரகமோ
திசைகள் தெரியாமல்
சன்னங்களில் அவை
படுத்துறங்கின.

ஊழியக் காலமோ
கலி காலமோ
அல்ல அல்ல..
தமிழர் அழிப்புக் காலமாய்
அது நிகழ்ந்து கொண்டிருந்தது..!

சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன
சதா மரண ஓலங்கள்
உலகை ஆளும் அலைகளின்
ஊளைகளை தாண்ட வழியின்றி
களைத்தே மெளனித்தன.
உலக மானுட மனச்சாட்சி
கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...!

மீண்டும்.. காற்றிடை வாழும்
உயிர் பேசிக் கொண்டது..

அந்தக் கொடுமையின்
தாண்டவம் கண்டு
ஆண்டுகள் ஆறு கடந்தாயிற்று..
ஆன்ம அமைதிக்கு கூட
அங்கு வழியில்லை.!

உரிமை தேடிய
சக மனித அழிவினில்
சரித்திரம் படைத்திட்டதாய்
அமைதி காத்திட்டதாய்
சமாதானம் சாந்தி அடைந்திட்டதாய்
எழும் சலசலப்புகள் அடங்கவில்லை.

புழுதி கிளம்பும் மண்ணில்
எழுந்து நிற்கும்
வெற்றிக் கோபுரங்களின் உச்சியில்
பேய்கள் வாழ்வது தெரியாமல்
உலகம் உறங்கிக் கொள்கிறது.!

கண்ணிமைப் பொழுதினில்
அழிந்து போன
தன் உடலைத் தேடும்
உயிர்கள் அங்கு..

தன் உடல் அழிப்புக்கான
நீதியைத் தேடி
பேய்களாகி
அந்தக் கோபுரங்களில்
வீடு கட்டி வாழ்கின்றன..
எத்தனை கண்கள்
காணும் அவை...!


Wednesday, November 26, 2008

வாழ்த்தடா வாழ்த்து.. வாழ்த்தும் போதே வீரம் வரும்.



அண்ணன் என்று சொல்லடா
தமிழ் மன்னன் என்று சொல்லடா
பிரபாகரன் எனும்
தமிழ் வீரனை..!

அவன் பேச்சில் ஒரு மூச்சடா
மூச்சில் கூட தமிழடா
தமிழ் மானம் காக்கும் வீரம்
அவன் தோள்களில்..!

படை நடத்தும் சிங்களம்
பதறிப் போகும் பாரடா
அண்ணன் படையின் வீரம்
மாழ்வதில்லை கேளடா..!

சண்டைக்களத்தில் அவன் வாழ்வடா
சாவுக்கும் அஞ்சாத வீரன்டா
தமிழ் மானம் அவன் உயிரடா
சயனைட் காவும் தோழன்டா..!

அண்ணன் தலைமையில்
வேங்கைகள் பாரடா..
தமிழீழத்தின் மலர்வடா
வெறும் கைகளில் இல்லையடா
உணர்ந்தும் நீயும் நில்லடா
அண்ணன் வழியில் கரங்கோர்த்தே..!

வாழ்த்தடா வாழ்த்து
அண்ணனை வாழ்த்து
54வது அகவையில் வாழ்த்து
வாழ்த்தும் போதே
வீரம் வரும்...
விழித்தெழுந்து நடவடா
அண்ணன் பாதையில்
தாய் மண்ணை மீட்க..!


நன்றி யாழ் இணையம்.

Thursday, June 19, 2008

தொலைந்த கவிதைகள் சில கிடைத்தன.

2004 டிசம்பர் திங்களில் தாக்கிய சுனாமி தொடர்பாக எழுதிய கவிதை http://kuruvikal.yarl.net சிதைவடைந்ததோடு தொலைந்து போனது. அத்தோடு சேர்த்து பல கவிதைகளும் தொலைந்து போயின.

இப்போ சுனாமி பற்றி கவிதை ஒன்றும் இன்னும் சில கவிதைகளும் பிறதளங்களில் இருந்து மீடக்கப்பட்டுள்ளன. அத்தளங்கள் பெருந்தன்மையோடு எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு ஆக்கங்களை பிரசுரித்திருந்தால் இவற்றை மீட்க முடிந்துள்ளது.

நன்றி நெருடல் இணையத்தள நண்பர்களே.

------------

கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!
படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!

குருவிகள்.

நெருடலில் கவிதையைக் காண இங்கு அழுத்துங்கள்.

-----------------

வாழ்க்கையில்... வனா, வாவன்னா.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!

கொழுவியாரின் புண்ணியத்தில் மீட்க்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.

கொழுவியாரின் வலைப்பூவில் காட்சியளிக்கும் தொலைந்து போன கவிதைகளில் சில. இங்கு அழுத்திப் பார்க்கலாம்.

நன்றி கொழுவியாரே..!

இதுவரை மீட்கப்பட்ட 67 மேலதிக கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. கவிதைகளை மீட்டுத் தந்தது அன்புத் தங்கை வெண்ணிலா. நன்றிகள் வெண்ணிலாத் தங்கையே.

Wednesday, May 21, 2008

பிரிகேடியர் பால்ராஜ் ஓர் களச்சரித்திரம்.



வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்





பிரிகேடியர் பால்ராஜ்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

மூலம் இங்கு.