Tuesday, September 25, 2007

முற்றத்து முகங்கள்

முற்றத்து முகங்கள்

எழுதியவர்: தேசப்பிரியன்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஆடி 2007


அம்மா.. அம்மா.. என்று கத்தியபடி தனது லேடிஸ் சைக்கிளை முற்றத்தில் அவசர அவசரமாக போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் சுமதி...!

என்னடி.. ஏல் (A/L) சோதனை மறுமொழி பார்க்கப் போனா.. என்னடியாச்சுது என்று குசினியில் வேலையோடு இருந்த சுமதியின் அம்மா கமலம்.. மகளின் குரலைக் கேட்டுவிட்டு... பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்..!

நான் பெயிலாகிட்டன் அம்மா என்று.. முகத்தில் சோகம் ததும்ப.. ஓடிச் சென்று தாயை அணைத்தபடி அவரின் உடலில் முகத்தைப் புதைத்தபடி செயற்கையாய் அழுது கொண்டே சொன்னாள் சுமதி.

என்னடி பெயிலாகிட்டியா.. போச்சு.. என்ர மானம் போச்சுது.. லண்டனில இருக்கிற என்ர மனிசனுக்கு என்ன பதில் சொல்லப் போறன்.. பக்கத்தி வீட்டு சுரேஸ் போன முறை எல்லாப் பாடத்திலும் ஏ(A) எடுத்தவன்.. அவன்ர அம்மா எவ்வளவு புளுகு புளுகிக் கொண்டு ராசாத்தி போல இருக்கிறாள்.. இப்ப என்னைப் பார்த்து ஊரே நக்கலடிக்கப் போகுது.. வெளிநாட்டில உள்ள சொந்த பந்தங்களுக்கு என்ன பதில் சொல்லுவன்.. வெளில தலை காட்டேலாமல் பண்ணிப் போட்டியேடி...என்று புலம்பியபடி அணைப்பில் இருந்த மகளை தள்ளிவிட்டார் கமலம்..!

தாயின் புலம்பலை, கவலையை, கண்ணீரை அவதானித்த சுமதி.. லூசு அம்மா.. அழாத...இந்தளவுதான் நீ என் மேல வைச்ச நம்பிக்கையா.. எனக்கு 3 ஏ.. எல்லாப் பாடத்திலும் ஏ அம்மா. டிஸ்ரிக் ராங் 3. யாழ்ப்பாண மெடிக்கல் பக்கல்ரி (Medical faculty) கிடைக்கும்.. நீ விரும்பினது போல உன்ர மகள் டொக்டர் ஆகும் காலம் கன தூரத்தில இல்லையம்மா..!

போடி.. ஒரு நிமிசம் என்ர இருதயமே நிண்டு போச்சுது. உனக்கு விளையாட்டு.. நீ சோதனைக்குப் படிக்க நித்திரை முழிச்சதை விட நான் தான்டி உனக்காக அதிகம் முழிச்சிருப்பன்.. எனக்கெல்லோ தெரியும் உன்னோட பட்ட பாடு. அதுவும் இந்தச் செல்லடிக்க பொம்பரடிக்க.. பங்கரும் புத்தகமுமா நீ பட்ட பாடுகள்.. எல்லாத்துக்கும் நல்ல முடிவா அந்தச் செல்வச்சந்நிதியான் ஒரு நல்ல முடிவைக் காட்டிட்டான். எனிப் படிச்சுப் பெரிய டொக்டர் ஆகி.. எங்கட மக்களுக்கு சேவை செய்யனும் என்ன.. என்று தள்ளிவிட்ட மகளை இழுத்து இறுக அணைத்து முத்தமிட்டு தலையைத் தடவிக் கொடுத்தார் கமலம்.

சிறிது நேரத்திலேயே... தாயின் அன்புப் பிடிக்குள் இருந்து வெளி வந்த சுமதி.. குசினிக்குள் சென்று ஒரு குவளை தண்ணியைக் குடிச்சிட்டு.. அம்மா இவள் கோமதிக்கு என்ன றிசல்ட் என்று பார்த்திட்டு வரட்டே என்றாள்.

சரி போயிட்டு கெதியா வா.. உங்கால அப்போத வண்டு (ஆளில்லா வேவு விமானம்) சுத்திட்டுப் போனது.. போய் வாறது கவனமடி. பொம்பர் வந்தா சைக்கிளைப் போட்டிட்டு விழுந்து படு என்ன..

ஓம் அம்மா.. என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டாள் சுமதி வீட்டை விட்டு.

கமலமும் மகள் சுமதியும் யாழ்ப்பாண இடம்பெயர்வோடு வன்னிக்கு இடம்பெயர்ந்து இப்ப 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் வன்னி மண்ணை விட்டு போக மனசே இல்லாமல் தங்கிவிட்ட சில தமிழர்களில் அவர்களும் அடங்கிவிட்டனர். தகப்பன் லண்டனில அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்றிருந்தும் அங்க வரச் சொல்லி அடம்பிடிச்சும்.. ஊரில படிச்சு டொக்டர் ஆகனும் என்ற வைராக்கியத்தில் பல இடர்களின் மத்தியிலும் படிச்சு சித்தி பெற்றவர் வரிசையில் சுமதியும் அடங்கி இருந்தாள்.

கோமதி.. கோமதி.. என்னாச்சடி.. றிசல்ட் பார்த்தியா.. என்று கோமதியின் வீட்டு வாசலில் இருந்தே கூவிக் கொண்டு அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள் சுமதி.

வாடி சுமதி...வா.. பாத்திட்டண்டி.. ஏ 2சி யடி.. மெடிசின் கிடைக்கிறது கஸ்டம்..! உனக்கு எப்படிடி றிசல்ட்.

எனக்கு 3ஏ யடி. மெடிசின் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் சுமதி. நான் இப்பதான் கனடாவில இருக்கிற அப்பாட்ட என்ர றிசல்ட்டைச் சொன்னன். அவர் "கவலைப்படாத நான் இங்கினை ஒரு படிச்ச பொடியனாப் பார்த்துப் பேசி கலியாணம் கட்டி வைச்சு உன்னைக் கனடா கூப்பிடுற வழியைப் பாக்கிறன்" என்று சொன்னார். நானும் சம்மதிச்சிட்டண்டி. எத்தனை நாளைக்குத்தான் இங்க இருந்து கஸ்டப்படுறது. ஊரில உள்ளதுகள் எல்லாம் தினமும் வெளிநாட்டுக்குப் போயிட்டே இருக்குதுகள். யாரும் திரும்பி வரப்போறதில்லை. நாங்க மட்டும் இங்க இருந்து என்ன ஆகப் போகுது..!

என்னடி கோமதி இப்படிச் சொல்லுறா. மெடிசின் கிடைக்கல்ல என்ற விரக்தியில பேசிறியா..?!

இல்லை சுமதி. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல்ல. தினமும் செல்லடி பொம்பரடி..யுத்தம்.. சண்டை.. பொருளாதாரக் கஸ்டம்..! கனடா போனா எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள். அப்படியே கலியாணத்தையும் கட்டிக் கொண்டு "செற்றில்" ஆகிடலாமடி. அங்க இருந்து எந்தக் கஸ்டமும் இல்லாம இங்கத்தை விசயங்களை வைச்சு.. ஆமி, பொம்பர் பயமே இல்லாம பொழுதுபோக்கா வருசக் கணக்கா கதை பேசிட்டே இருக்கலாமடி. ஒளிவீச்சில இங்க நடக்கிறதுகளை வாங்கிப் போட்டு பார்த்துக்கலாம். பேசாம நீயும் உங்கட அப்பாவோட கதைச்சு லண்டன் போற வழியப் பார். உன்ர றிசல்டுக்கு அங்க போயும் படிக்கலாம் தானே மெடிசின். படிச்சிட்டு அங்கேயே அப்படியே ஒரு அழகான டொக்டராப் பார்த்துக் கலியாணம் கட்டிக் கொண்டு செற்றிலாகிற வழியைப் பாரடி..!

நீ சொல்லுறதும் சரிதாண்டி கோமதி. உங்க யாழ்ப்பாணத்தில இருந்தா 7 - 8 வருசம் மிணக்கட வேணும்..மெடிசின் படிக்க என்று சொல்லினம். நாட்டு நிலையும் எப்படிப் போகுமோ தெரியல்ல. அம்மா தாண்டி இங்க படிச்சு ஊர் மக்களுக்கு சேவை செய்யனும் என்றா..அப்பாக்கு எங்களை லண்டன் எடுக்கிறதுக்குத் தான் சரியான விருப்பம். அவருக்கு அங்க சொந்தக்கடை வீடு வாசல் என்றிருக்குது.

உங்கட அம்மாக்கு லூசடி. நீ தான் அம்மாக்கு எடுத்துச் சொல்லி.. கெதியா இங்க இருந்து கிளம்பிற வழியைப் பார்க்கனும். நான் இன்னும் ஓரிரு மாசம் தான் இங்க இருப்பன். அதுக்கப்புறம் கனடா தாண்டி... என்றவள் கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியோட உன்னையும் உன்ர மனிசனோட லண்டனில பார்க்கிறன் என்று பகிடி கலந்து பொடி வைத்து கூறிக் கொண்டாள் கோமதி.

என்ன எனக்கு மனிசனோ.. நான் இப்ப கலியாணம் எல்லாம் கட்டிறதா இல்ல. பெரிசா படிக்கனும் என்றதுதான் இப்ப என்ர நிலை கோமதி. கலியாணம் பொம்பிளையளுக்கு சுமையாகிட்டு வருகுதடி இந்தக் காலத்தில. பார்ப்பம்.. படிச்ச முடிச்சிட்டு அவசியம் என்றா செய்யுறது இல்லை என்றா லண்டனில மக்களுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பன் அன்னை திரேசா போல.

அது தாண்டி சொல்லுறன் இப்பவே லண்டன் போற வழியைப் பார் என்று.

அம்மாட்டைச் சொல்லி அப்பா மூலம் நானும் இங்க இருந்து கிளம்பிற வழியைப் பார்க்கப் போறன் கோமதி. சில வேளை உனக்கு முதல் நான் கிளம்பிடுவன்ரி வன்னியை விட்டு லண்டனுக்கு.

சரி அதுகள் கிடக்கட்டும்.. அதுகளைப் பற்றி அப்புறமா.. எங்கட அம்மாக்களோட விரிவா..கலந்து பேசி ஒரு முடிவெடுப்பம்..இப்போதைக்கு.. இவள் சுரதா வீட்ட போய் றிசல்ட் கேட்டிட்டு வருவம்.. வாறியேடி..!

பொறு.. அம்மாட்ட சொல்லிட்டு வாறன். அப்படியே சுரதா வீட்டையும் போட்டு ஸ்கூலடிக்கும் போயிட்டு வருவம்.

அம்மா நான் சுமதி கூட சுரதா வீட்டடிக்குப் போயிட்டு வாறன்.. கெதியா வந்திடுவனனை.. என்று கத்தி விட்டு

கோமதி சுமதியுடன் சுரதா வீடு நோக்கி பயணிக்கலானாள்.

சுரதா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்பிள்ளை. தகப்பன் விசுவமடுவில் நெற்காணிகள் வைத்து விவசாயம் செய்பவர். தாய் அதே பகுதியில் ஒரு கிராமியப் பாடசாலையில் ஆசிரியையாகக் கடமையாற்றுபவர். வீட்டுக்கு ஒரே பிள்ளை அவள்.

போற வழியிலேயே தூரத்தில் தங்களை நோக்கிய பாதையில் சுரதா வருவதை அவதானித்துவிட்ட தோழிகள் இருவரும்..தங்கள் சைக்கிளை நிறுத்திவிட்டு...அவசரமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த சுரதாவின் வரவை நோக்கி சிறிது காத்திருந்தனர்.

சுரதா அருகில் வந்ததும்..என்னடி சுரதா என்ன றிசல்ட்டடி.. எங்கையடி பறக்கிறா...என்று கத்தினாள் சுமதி

3 ஏ யடி. டிஸ்ரிக் ராங் 1... இப்ப எனக்கு முக்கிய வேலை ஒன்றிருக்கு என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை நிறுத்தாமல் பறந்து கொண்டிருந்தாள் சுரதா.

என்னடி வேலை.. அப்படி அவசரமா... பாஸ் ஒபீஸ் போய் கொழும்புக்குப் போக பாஸ் எடுக்கப் போறியோ.. என்று தன் சந்தேகத்தை அவசரக் கேள்வியாக்கித் தொடுத்தாள் கோமதி.

இல்லையடி.. வவுனியா பக்கம் அடிபாடாம். காயப்பட்ட அக்காமாரும் அண்ணாமாரும் கொண்டு வரப்படுகினமாம். அதுதான் முதலுதவி செய்யப் போறன். பிறகு கதைப்பம் என்ன.. என்று சைக்கிளை நிறுத்தாமலே பதிலளித்தபடி.. நேரத்தை தாமதிக்காமல் அவசர அவசரமாக வைத்தியசாலை நோக்கி விரைந்து பறந்து கொண்டிருந்தாள் சுரதா... தீர்க்கமான முடிவோடு. அன்றே அவள் தன்னை தமிழீழ மருத்துவப் பிரிவில் மாணவியாகவும் இணைத்துக் கொண்டாள்.

நன்றி: வன்னித்தென்றல்

மூலப் பிரதிக்கு இங்கு அழுத்தவும்.

Monday, September 24, 2007

தியாகி திலீபனின் தியாகத்தின் 20ம் ஆண்டு நினைவாக..!

தியாகி திலீபன் தமிழீழ தமிழ்மக்களின் 5 அம்சக்கோரிக்கைகளை இந்திய மத்திய ராஜீவ் காந்தி அரசிடம் முன்வைத்து.. இந்திய அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக ஈழத்தில் நிலை கொண்டிருந்த போது.. 16-09-1987 அன்றில் இருந்து 26-09-1987 அன்று வரை.. உண்ணா நோன்பிருந்து தமிழ் மக்களுக்காக உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும்.. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகி இருந்த மாணவருமாக விளங்கியவர்.

இன்று.. உலகின் நவீன காந்தியாகவும் இவர் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார்.




திலீபன் அவர்களுக்காக பாடப்பட்ட நினைவுப் பாடல்.



திலீபன் முன் வைத்த 5 அம்சக்கோரிக்கைகளும் ஆங்கில வடிவில் இக்கானொளியில் உண்டு.

அவரின் வீரமரணத் திகதி தவறுதலாகப் 26-August-1987 என்று இக்கானொளியில் உள்ளது. அதைத் திருத்தி 26-September-1987 என்று வாசியுங்கள்.

மேலும் தியாகி திலீபன் அவர்களின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும் நடந்த நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கானொளி வடிவில் யாழ் இணையத்தில் உள்ளது. இங்கு அழுத்தி அதைப் பார்வையிடலாம்.