Tuesday, January 31, 2006

ஹமாஸ் வெற்றி கிளப்பும் கேள்விஇஸ்ரேலை நிர்மூலஞ் செய்வதைக் கொள்கையாகக் கொண்ட தீவிரவாத இயக்கமான ஹமாஸ் கடந்தவாரம் பாலஸ்தீன பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற உறுதியான வெற்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் நிலக் காட்சியை உலுக்கியிருக்கிறது. ஹமாஸ் கணிசமான எண்ணிக்கை ஆசனங்களைப் பெறும் என்று தேர்தலுக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பாலஸ்தீன சட்டப் பேரவையில் இந்த இயக்கம் அறுதி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றியடையும் என்று எவருமே எதிர்வு கூறியதில்லை.

132 ஆசனங்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 76 ஆசனங்களைக் ஹமாஸ் கைப்பற்றி பாலஸ்தீன அதிகார சபையை நிருவகிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது. இதன் மூலம் சுமார் 4 தசாப்தகாலம் பாலஸ்தீன மக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் மிகப்பெரிய அங்கத்துவ அமைப்பான பதாஹும் கொண்டிருந்த மேலாதிக்கம் முடிவுக்கு வருகிறது.

பாலஸ்தீன அதிகாரசபை ஹமாஸ் இயக்கத்தின் கைக்குவரப் போகின்றபோதிலும், யாசிர் அரபாத்தின் மறைவுக்குப் பிறகு பாலஸ்தீன ஜனாதிபதியாகத் தெரிவான மஹ்மூத் அப்பாஸ் தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போகிறார். இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்திடம் கண்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கும் பதாஹ் அமைப்பின் போராளிகள் வன்முறைகளில் இறங்கியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் ஹமாஸ் இயக்கம் எவ்வாறு செயற்படப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும். ஹமாஸைப் பொறுத்தவரை, அவ்வியக்கம் காசா பள்ளத்தாக்கிலும் மேற்கு ஆற்றங்கரையிலும் சமூக நலன்புரி அமைப்புகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மூலமாக பாலஸ்தீன மக்களுக்கு பயனுறுதியுடைய சேவையை வழங்கிய ஒரு சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. முன்னர் ஆட்சிசெய்யப்பட்ட பாணியில் இனிமேலும் தாங்கள் ஆட்சிசெய்யப்படுவதை விரும்பவில்லை என்பதை பாலஸ்தீனர்கள் தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள். அதிகாரத்துக்கு வரும் புதிய கட்சி நல்லாட்சியை வழங்குகின்ற அதேவேளை, இஸ்ரேலுடனான விவகாரங்களைக் கையாளுவதில் உறுதியுடன் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தையும் பாலஸ்தீன மக்கள் மீதான அதன் ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதில் சமரசத்துக்கு இடமில்லாத கொள்கையைக் கொண்ட - பெரும் பாலான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பான ஹமாஸ் இயக்கம் யூத அரசுடன் சமாதான சக வாழ்வைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை வெளிக்காட்டுமா? யூத அரசு மத்திய கிழக்கில் இருப்பதற்கான உரிமையை ஹமாஸ் அங்கீகரிக்குமா? பலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் காலஞ்சென்ற யாசிர் அரபாத்தும் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரே. ஆனால், பின்னர் 1988 இல் இஸ்ரேல் அரசு இருப்பதற்கான உரிமையை அவர் அங்கீகரித்ததுடன், 1990 களில் இஸ்ரேலுடன் இடைக்கால உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டார். அவ்வாறான ஒரு அடிப்படைக் கொள்கை மாற்றத்தைச் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் தயாராயிருக்குமா? அதிகாரப் பொறுப்புக்கு வருகின்ற அவ்வியக்கத்தின் அடுத்துவரும் நாட்களிலான கொள்கை நகர்வுகளே மத்திய கிழக்கின் சமாதானத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், ஹமாஸ் அதன் ஆயுதமேந்திய பிரிவை கலைக்க வேண்டுமென்றும் இஸ்ரேலை நிர்மூலஞ் செய்வதென்ற கொள்கையைக் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டிருந்தார். வன்முறைகளைக் கைவிடுவதற்கும் இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கும் மறுத்துவருகின்ற ஹமாஸ் நிலைப்பாடுகளின் காரணமாக, அவ்வியக்கத்தினால் நிருவகிக்கப்படக் கூடிய பாலஸ்தீன அதிகார சபையுடனான உறவுகளில் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென்று ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்திருக்கிறது.

காசா பள்ளத்தாக்கில் இருந்து கடந்த வருடம் வெளியேறியதைத் தொடர்ந்து மேற்கு ஆற்றங்கரையில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறினால், அந்நாட்டுடன் நீண்ட போர் நிறுத்தமொன்றுக்கு இணங்குவதற்கு தயாராயிருப்பதாகவும் ஆனால், அதன் இறுதி இலக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அதிகார சபைக்கும் பதிலாக இஸ்லாமிய அரசொன்றை ஏற்படுத்துவதே என்றும் தேர்தல் காலத்தில் ஹமாஸ் இயக்கம் நிலைப்பாட்டை விளக்கியிருந்தது. ஆயுதங்களும் ஆயுதப் போராட்டமும் ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய விவகாரங்கள். ஆக்கிரமிப்பு நீடிக்கும் வரை, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையையும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான உரிமையையும் பாலஸ்தீன மக்கள் கொண்டிருப்பர் என்று ஹமாஸ் தேர்தலுக்குப் பின்னரும் அறிவித்திருக்கிறது. ஹமாஸை தங்களது மத்திய கிழக்கு கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்புடையதான வகையில் வழிக்குக் கொண்டுவருவதற்கு பாலஸ்தீன அதிகார சபைக்கான பொருளாதார உதவிகளை ஒரு வெருட்டல் கருவியாக பயன்படுத்த மேற்குலகம் முனைந்து நிற்கிறது.

மத்திய கிழக்கில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜனநாயகத் தேர்தலொன்றின் மூலம் பாலஸ்தீன மக்கள் வெளிக்காட்டிய விருப்பத்தை எந்தவிதமாக மதிக்கப்போகின்றன அல்லது வியாக்கியானப்படுத்துகின்றன என்ற ஒரு முக்கியமான கேள்வி இன்று சர்வதேச சமூகத்திடம் விடை வேண்டி நிற்கிறது.

சூரியன்.கொம்

Monday, January 30, 2006

சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்லண்டனுக்கு மேலாக இரண்டு விமானங்கள் மிக நெருக்கமாக பறப்பது போன்ற நிலையில் ஒரு புகைப்படக்காரர் புகைக்கப்படம் ஒன்றைப் பிடிக்க அதுவே பெரும் சர்ச்சையாகி விட்டது. இப்படி நெருக்கமாக விமானம் உண்மையில் பறந்திருந்தால் விபத்துக்கான சந்தர்ப்பம் அதிகம் என்பதாலே அது சர்ச்சைக்கு ஆளானது.

இருப்பினும் இப்புகைப்படம் இரு விமானங்களும் நெருக்கமாகப் பறப்பதாக தோற்றப்பாட்டைக் காட்டுகிறதே தவிர உண்மையில் இரண்டு விமானங்களுக்கும் இடையில் குறைந்தது 2.5 மைல் வேறுபாடு இருந்ததாக இவ்விமானங்களைக் கண்காணித்த விமானக்கட்டுப்பாட்டறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது..!

படம் மற்றும் தகவல் உதவி - bbc.com

அனுபவம்..!

பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!

Monday, January 23, 2006

தோப்பிருந்து ஒரு காவியம்தோப்பிருந்து ஒரு காவியம்

குருவி ஒன்று தான் வாழ
தேடியது ஒரு தோப்பு
வந்தது மாந்தோப்பு
வரவினில் கண்டது
ஓர் மலர்
மலரிடை மலர்ந்தது
வாழ்வெனும் வசந்தம்
மலரதும் குருவியதும்
படைக்குது ஒரு காவியம்
அது...
மாநிலத்தில் மானிடர் தாம்
கண்டிடாத புனித காவியம்.

தோப்பருகே ஒரு குடிசை
அங்கும் வாழுது
ஒரு கூட்டம்..!
வஞ்சகமும் பொறாமையும்
அவர்தம் மனங்களில்
கறுவும் மனதை அடக்க முடியா
கலங்கி நிற்குது அவர் சித்தம்..!
கற்பனையில் கூட
அடுத்தவன் வீழ்ச்சியில்
அகம் மகிழவே துடிக்குது..!
பாவம் அவர்
அறிவிருந்தும்
அறியாமையில்...!

தோப்பிருந்த குருவியது
மனமிரங்கி
மலருடனிணைந்து
பாவப்பட்டவர் மீது
ரட்சிக்கிறது
மானிடா....
மனமதில் அமைதி கொள்
வாழ்வதில் சிறப்பாய்
மாற்றானை உன்னில் தரிசி
உன்னை மாற்றான் மதிப்பான்..!
அன்றி...
வாழ்வில் நீயே
உன்னை மிதிப்பாய்
உன் நினைவுகள்
ஓர் நாள்
உன் நிஜம் அழிக்கும்...!

Tuesday, January 17, 2006

வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!

வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!பார் போற்றும் சிங்கமே
பரராஜ சிங்கமே
சிங்களச் சீமையில்
சிம்மக்குரலாய்
ஈழத்தமிழன் துயர் சொன்னவனே
இன்று ஈனத்தனத்துக்கு
இரையாகி வீழ்ந்தாயோ...??!

அகிலம் உன் ஆங்கிலத்துக்கு
அருவருக்காமல் செவிமடுக்கும்
அந்நியத்தனம் இன்றி
அனைவரையும் அரவணைக்கும்
அற்புத சீலன் நீ
அர்த்த ராத்திரியில்
கர்த்தரின் பூஜையில்
கருணையே அற்றவனின்
கருவிக்கு இலக்காகினையோ..??!

எத்தனை ஆண்டுகள்
ஈழ்த்தமிழரின் அகிம்சைக் குரலாய்
அகிலம் உற்று நோக்க
சிங்களப் பாசறை நடுவில்
சிங்காரத் தமிழனாய்
நடை பயின்றவன் நீ
சீண்டிப் பார்ப்பவன்
தூண்டலைக் கூட
தனித்து தாங்கியவன்
அணையாப் புன்னகையால்..!

வடக்கென்ன கிழக்கென்ன
தமிழ் தேசியத்தின்
உயிர் மூச்சாம்
உந்தன் உறவாம் ஈழத்தமிழன்
குருதி சொட்டினால்
ஈனக்குரல் செவி தட்டினால்
உடனே உறுமி எழுவாய்
நியாயம் கேட்டே வரிந்து நிற்பாய்
தாமதமின்றி உன் பணி செய்துகிடப்பாய்...!

உந்தன் குரலுக்கு
குலைநடுங்கிச் சிங்களம்
வைத்த விசாரணைக் கமிஷன் எத்தனை..!
உன் குரலுக்கு அடங்கிய
துப்பாக்கிகள் எத்தனை...!
சாக்குப்போக்கு உன்னிடம் பலிக்காது
தூய கரமும்
தூய உள்ளமும்
வணங்கா முடியும்
ஈழத்தமிழனின் குணமென்று
அரசியல் களத்தில்
சாதித்துக் காட்டிய
சாதனை நாயகன் நீ..!

கருவி தரித்த
சிங்களப் பாதுகாப்பு
சீ... என்று உதறியே
சொந்த மண்ணில்
மக்களுக்காய் மூச்சிழுத்தவன்..!
மூடர்கள் சிலரின்
முட்டாள் தனத்துக்கு
மூச்சையளித்தாயோ..??!
மூச்சிறைத்து விழுகிறோம்
உன் வீழ்ச்சி கண்டுமே
அநாதைகளாய்....!
வீரனே நீ மீண்டும் வா
மீண்டு வா
எம் ஆன்மா தந்து
அணை போடுகிறோம்...!


படம் - சங்கதி.கொம்

கூத்தடித்த கடலே விடை கொடு...!

கூத்தடித்த கடலே விடை கொடு...!கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!

படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!


கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

Monday, January 16, 2006

யாரது சிந்திப்பது...??!

யாரது சிந்திப்பது...??!வான்வெளி மீதினில் ஒரு பந்து
அதை வையகம் என்று கொண்டனர் மக்கள்
வழி வழி அது எங்கள் வாழிடம்
வாழ்ந்தும் போயின பல தலைமுறைகள்
இடையினில் வந்தன புரட்சிகள்
நன்மையும் தீமையும் விளைவுகளாயின..!

கரியமிலயும் காடழிப்பும்
காரிகை இதழ் பூச்சும் ஓசோன் படையழிவும்
கூட்டுச் சேர்ந்திட
வெப்பம் தாங்கிடா உருகும் பனிபோல்
கண்ணீரும் பெருகுது பல நோய்கள் கண்டு..!
நிம்மதி என்பதை பறிகொடுத்து
நிதமும் வீழ்கிறான் மனிதன் சுவடுகளாய்.!

கிண்டிக்கிண்டி பூமிப் பந்தும்
செழிப்பது இழக்குது
வளங்கள் அங்கு வறுமைக்குள் வீழ
வறுகி எடுப்பவர் வல்லரசுகள் ஆகி
வலிமை காட்டிட அழிவுக்கு ஆயுதங்கள் பெருக்குகிறார்...!
அகதியும் அலைச்சலும்
சனத்தொகை என்பதும் அபரிமிதமாக
அன்றாடம் வயிற்றுக்கு வழியின்றி
வறுமையில் வீழுது உயிர்கள்..!

அநாகரிகம் என்பது ஆட்சிப்பீடமேற
நாகரிகப் போர்வை அதுக்கு..!
சமத்துவம் என்பது இடறிய நிலையில்
நகரங்கள் எல்லாம் நரகங்களாகுது..!
புகையும் மதுவும் புன்னகைக்குது
மரணம்தனை வரவேற்க..!
வேர் விட்ட தளிர்களும் வெந்து வீழ்கின்றன
ஆழ ஊன்றிய
ஆணி வேர்களும் அறுபட்டுப் போகின்றன..!

மனங்கள் எல்லாம் அழுத்தம் தங்கிட
அமைதி என்பது இழந்து போகுது..!
ஆணும் பெண்ணும் அலைந்து விலங்குகளாய்
உணர்ச்சிக்கு அடிமையாகிட
கொடிய நோய்கள் தொற்றுக்களாகி
உடல்கள் அரிபடுகின்றன..!
சந்ததி என்பது
சரித்திரம் தொலைக்கிறது
தானும் சரிந்திட தற்கொலைக்கு வித்திடுகுது..!

யாரது சிந்துப்பது...
எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை
ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா
காலடி மிதிக்கும் பூமிப் பந்தை
காப்பது எப்படி சிந்திப்பாயா...??!
சந்திப்பாயா சவாலை..!