Thursday, June 19, 2008

தொலைந்த கவிதைகள் சில கிடைத்தன.

2004 டிசம்பர் திங்களில் தாக்கிய சுனாமி தொடர்பாக எழுதிய கவிதை http://kuruvikal.yarl.net சிதைவடைந்ததோடு தொலைந்து போனது. அத்தோடு சேர்த்து பல கவிதைகளும் தொலைந்து போயின.

இப்போ சுனாமி பற்றி கவிதை ஒன்றும் இன்னும் சில கவிதைகளும் பிறதளங்களில் இருந்து மீடக்கப்பட்டுள்ளன. அத்தளங்கள் பெருந்தன்மையோடு எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு ஆக்கங்களை பிரசுரித்திருந்தால் இவற்றை மீட்க முடிந்துள்ளது.

நன்றி நெருடல் இணையத்தள நண்பர்களே.

------------

கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!
படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!

குருவிகள்.

நெருடலில் கவிதையைக் காண இங்கு அழுத்துங்கள்.

-----------------

வாழ்க்கையில்... வனா, வாவன்னா.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!

கொழுவியாரின் புண்ணியத்தில் மீட்க்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.

கொழுவியாரின் வலைப்பூவில் காட்சியளிக்கும் தொலைந்து போன கவிதைகளில் சில. இங்கு அழுத்திப் பார்க்கலாம்.

நன்றி கொழுவியாரே..!

இதுவரை மீட்கப்பட்ட 67 மேலதிக கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. கவிதைகளை மீட்டுத் தந்தது அன்புத் தங்கை வெண்ணிலா. நன்றிகள் வெண்ணிலாத் தங்கையே.

1 comment:

Anonymous said...

this is very nice