Friday, May 18, 2007

புரியாத புதிர் புரிந்த போது..!

என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி.

இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன்.

சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி.

ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறாள். ஜெகனும் அங்குதான் கணணிப்பொறியலாளராக வேலை செய்கிறான். ஜனனி சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருந்தாள். இருந்தாலும் ஜனனியின் அன்பில் அழகில் தன்னையும் மனசையும் பறிகொடுத்த ஜெகன் அதன் பின் அவளின் அன்புக் காதலனாக அவள் அருகிருப்பிலும் அதன் நினைவுடனுமே தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஜனனியும் ஜெகனும் வைத்தியசாலை உணவு விடுதியில் "ரீ" ஓடர் செய்துவிட்டு கதை பேசிக்கொண்டிருக்கும் போது ஜெகனின் குறுகிய கால நண்பன் பிருந்தன் அங்கு வந்தான். "காய்" ஜெகன்... எப்படி இருக்கீங்க... வழமையான குசலம் விசாரிக்கும் வினாக்களோடு ஆரம்பித்தவன் ஜனனியையும் பார்த்து... நீங்க எப்படி இருக்கிறீங்கள் என்று அவளையும் நலம் விசாரித்துக் கொண்டு அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.

ஜெகனும் ஜனனியும் தங்கள் பங்குக்கு நாங்கள் நலமாக இருக்கிறம்.. உங்கள் பாடுகள் எப்படி என்று கேட்க..

நானும் நலம்.. ஜெகன், ஜனனி என்ன சாப்பிடுறீங்கள்... என்று மறுபடி பேச்சை தொடர்ந்த பிருந்தன், நான் ரீயும் பனிசும் எடுக்கப் போறன் என்றான்.

நாங்கள் ரீக்கு ஓடர் கொடுத்திட்டம் பிருந்தன் நீங்கள் உங்களுக்கு ஓடர் கொடுங்கோ என்றாள் ஜனனி.

ஓடர் கொடுத்தவை உடனடியாக வந்து சேர... மூவரும் ரீ அருந்திக் கொண்டிருக்கும் போது.. பிருந்தன் சொன்னான் ஜெகன் நீங்கள் லண்டனுக்கு வேலை விசா எடுத்துப் போகலாமே. உங்கள் துறையில நல்ல தொழில் வாய்ப்பிருக்கே அங்க என்று. அதற்கு ஜெகன் இப்ப எல்லாம் அந்த ஐடியா இல்லை. பார்ப்பம் எங்க திருமணம் முடிய ஜோசிப்பம் என்று காத்திரமாகச் சொன்னான்.

என்ன கல்யாணமா.. அப்படி ஒரு கனவும் இருக்கா என்றாள் ஜனனி ஜெகனைப் பார்த்து சிரித்தப்படி.

என்ன ஜனனி இப்படிச் சொல்லிட்டீங்கள். ஜெகன் பலத்த எதிர்பார்ப்போட உங்களை காதலிக்கிறார் என்று நினைக்கிறன் என்றான் பதிலுக்கு பிருந்தன்.

அவருக்கு உள்ள எதிர்பார்ப்புக்களை மட்டும் நிறை வேற்றிறதுதான் என் காதலா.. பிருந்தன். நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் என்றது தான் எனக்குப் புரியல்ல என்று மீண்டும் வலிந்து சிரிப்பை வரைவழைத்தபடி சொன்னாள் ஜனனி.

இருவர் சம்பாசணையையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெகன் ஆரம்பத்தில் ஜனனி பகிடியாகச் சொல்வதாக எண்ணினாலும் ஜனனியின் பேச்சில் இருந்த குழப்பத்தைக் கவனிச்சிட்டு.. என்ன ஜனனி இப்படிச் சொல்லுறீங்க. காதல் என்பது வாழ்க்கைல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு உள்ள சந்தர்ப்பம் மட்டுமில்ல ஒருத்தரில ஒருத்தர் தங்கி இருக்கிறதும் தானே என்று சொன்னான்.

அதற்கு ஜனனி உடனடியாகவே.. நான் உங்களிலையோ அல்லது யாரிலையுமோ தங்கி இருக்கனும் என்ற நிலையில இல்லை. யாரும் என்னில தங்கி இருக்கிறதும் எனக்கு சரிப்பட்டு வராது.

காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல் அப்புறம் கலியாணம் என்றதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் என் சுதந்திரத்தோட எதையும் எப்பவும் செய்யனும் என்ற நினைக்கிறவள். என்னை யாரும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ அல்லது என்னை முடிவெடுக்க நிர்ப்பந்திக்கவோ செய்யுறது எனக்குப் பிடிக்கிறதில்ல என்று காட்டமாக ஜெகன் எதிர்பார்க்காத தொனியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டே பதில் சொன்னாள் ஜனனி.

இல்ல ஜனனி.. நான் என்ன சொல்லவாறன் என்றால்.. என்று அவளைச் சமாளிக்க முனைந்த ஜெகனை.. நீங்கள் ஒன்றும் சொல்ல வேணாம் என்று கையில் வைத்திருந்த ரீயை மேசையில் வைத்துவிட்டு கோபத்தோடு வெளியேறினாள் ஜனனி.

சாறி ஜெகன்.. ஜனனி இப்படி கோவிப்பா என்று எதிர்பார்க்கல்ல. என் நண்பர்கள் சிலர் வேலை விசா எடுத்து லண்டன் போனதை அறிஞ்சு தான் கேட்டன்.. என்று ஜனனியின் செயலுக்கு தானும் ஒரு காரணமோ என்று எண்ணி ஜெகனிடம் மன்னிப்புக் கேட்டான் பிருந்தன்.

ஐயோ பிருந்தன்.. நீங்கள் நல்ல விசயத்தைத்தானே கேட்டிங்கள். அதில ஒரு தப்பும் இல்ல. ஆனா ஜனனிட செயற்பாடுதான் எனக்கும் புதிசா இருக்குது என்று கூறி.. நான் அப்புறம் சந்திக்கிறன் என்று சொல்லிவிட்டு குடித்த ரீயையும் பாதில வைச்சிட்டு குழப்பத்தோடு விடைபெற்றான் ஜெகன்.

அதன் பின்னர் ஜனனி ஜெகனுடன் சந்திக்கிறதை கதைக்கிறதை தவிர்க்க முனைந்தாள். ஜெகன் வலிந்து பேச முனைந்தும் ஓரிரண்டு பேச்சோடு ஜனனி நிறுத்தி.. ஜெகனோடு கதைக்கிறதையும் சந்திப்பதையும் தவிர்க்கவும் அவனைப் புறக்கணிக்கவும் செய்தாள்.

ஒரு நாள் போன் பண்ணி ஜெகனை உணவு விடுதிக்கு அழைத்த ஜனனி.. உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும் என்றாள்.

கொஞ்சம் என்ன ஜனனி... உங்களோட கதைக்க முடியாத கணங்கள் எவ்வளவு கனதியா இருக்குது தெரியுமா மனசுக்கு.. ரெம்பவே கதைக்க ஆசையா இருக்குது.. மனசு விட்டு பழையபடி அன்பா கதைப்பம் என்றான் ஜெகன் பலத்த எதிர்பார்ப்போடு.

அதற்கு சிறிது நேரம் மெளனத்தை பதிலளிந்த ஜனனி.. பின்னர் தானே மெளனத்தைக் கலைத்து இந்தத் தேவையில்லாத கதையெல்லாம் சினிமா டைலக் மாதிரி எங்கிட்ட வேணாம்..

உங்கட நிலைப்பாடும் என்ற நிலைப்பாடும் ஒத்துவாறதா தெரியல்ல எனக்கு. விரும்பினா நீங்க வேறை யாரையும் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு உங்க எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது போல வாழ்ந்திடுங்க. என்னை என் வழில போக விடுங்க என்றாள்.

ஜனனியிடம் எதிர்பார்க்காத அந்த வார்த்தைகள் இடியாக விழுந்தன ஜெகனின் காதில். அவளின் பேச்சில் திகைத்துப் போனவன் கலங்கிய கண்களுடன்.. என்ன சொல்லுறீங்க ஜனனி, என் மனசை நோகடிக்கிறது என்று தெரியாமல் தானா பேசுறீங்க என்றான்.

நான் யாரையும் நோகடிக்க வேணும் என்று சொல்லேல்ல. எனக்குப் பிடிக்காததை நான் சுதந்திரமாச் சொல்லுறன் என்றாள். இதுதான் என்ர நிலைப்பாடு. இதில இருந்து நான் மாறப்போறதில்ல. எனக்கு உங்களோட காதலும் வேணாம் ஒன்றும் வேணாம் என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்.

ஜனனி கோவப்படாம உணர்சிவசப்படாம... உங்களை பற்றி மட்டும் சிந்திக்காம என்னைப் பற்றியும் சிந்திச்சு நீங்க கதைக்கிறதா எனக்குப்படேல்ல. நீங்க மனசில எதையோ வைச்சிட்டு என்னை நோகடிக்கிறதாத்தான் படுகுது என்றான் ஜெகன்.

அப்படிப்படுகுதில்ல.. எதுக்கு அப்புறம் எதுக்கு என்னை தேடி வாறீங்க. தொந்தரவு பண்ணுறீங்க. நீங்களும் நிம்மதியா இல்லாம எனக்கும் நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கையா இருக்குது இது என்றாள் அவனிலேயே குற்றம் கண்டபடி.

என்னாச்சு ஜனனி உங்களுக்கு.. நாம காதலிச்சது பொய்யா அல்லது பழகியது பொய்யா.. அல்லது வாழ்வதே பொய்யா என்றான் ஜெகன்.

இதைக் கேட்டவள் சற்று அமைதியாகிவிட்டு.. எல்லாம் பொய் தான். அதுதான் சொல்லுறனில்ல நீங்க உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து கலியாணம் கட்டிட்டுப் போங்க என்று. ஏன் என்னை தொந்தரவு பண்ணுறீங்க.

நான் தொந்தரவு செய்தனா.. அப்படி என்ன தொந்தரவு செய்தேன் ஜனனி. செய்ததைச் சொல்லுங்க நான் என்னை முடிஞ்சளவு உங்களுக்கு ஏற்றாப்போல மாற்றிக்கிறன். உண்மையாவே என்னை மாற்றிக்கிறன். நீங்கள் தான் எனக்கு எல்லாம் என்று அப்பாவியாக அவள் முன் மண்டியிட்டான் ஜெகன்.

எனக்காக யாரும் தங்களை மாற்றிக்கிறது எனக்குப் பிடிக்கிறதில்ல. நானும் யாருக்காகவும் என்னை மாற்றிக்கமாட்டன். எனக்காக யாரும் காத்திருக்கவும் தேவையில்ல. என்ர சூழ்நிலைக்கு ஏற்பதான் நான் முடிவெடுப்பன் என்று முகத்தில் அடிப்பதுபோல வார்த்தைகளால் அடித்தாள் ஜனனி.

ஜனனி.. நீங்க ஏதோ குழப்பத்தோட இருக்கிறீங்க என்று நினைக்கிறன். மேலும் மேலும் பேசி உங்கட வெறுப்பை சம்பாதிக்க விரும்பல்ல. நேற்று வரை என்னைக் காதலிச்ச ஜனனியா இப்ப பேசுறது என்று எனக்கே சந்தேகமா இருக்குது. நீங்கள் எதையும் பேசுங்கோ உங்களுக்கு என்னைப் பேச உரிமை இருக்குது. ஆனா உங்களைத் தவிர எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை. அதுதான் என் தெளிவான நிலைப்பாடு என்றான் ஜெகன் உறுதியோடு.

அப்படியா சங்கதி.. நீங்க இப்படி புலம்பிக் கொண்டு இருப்பீங்க என்றதுக்காக நானும் இருப்பன் என்று நினைக்காதீங்க. நான் சந்தர்ப்பம் கிடைச்சா இன்னொருவரை மணக்கவும்.. ஏன் காதலிக்கவும் அவர் கூட வாழவும் தயங்கமாட்டன். எனக்கு தேவையென்று படுறதை நான் யாருக்கும் எதுக்கும் பயப்பிடாமல் செய்வன் என்றாள் ஜனனியும் பதிலுக்கு.

அது உங்கட விருப்பம். எங்கட காதலை உதறித்தள்ளுறதும் என்னை வருத்திறதும் தான் உங்களுக்கு சந்தோசமென்றால் அதை தாராளமாச் செய்யுங்க. அப்படியாவது உங்களை சந்தோசப்படுத்தின திருப்தில என் வாழ்க்கை என்னோட தனிமையில போயிட்டு இருக்கும் என்று தெளிவாகச் சொன்னான் ஜெகன்.

அதற்கு மெளனத்தைப் பதிலாக்கி.. எனக்கு ரைம் ஆச்சுது என்று கூறி விடைபெற்றாள் ஜனனி..!

அதன் பின் அவளைக் காண்பதே அரிதாகி விட வேதனைகளோடு தனிமையில் வாழ்க்கையை ஓட்டிய ஜெகன்.. சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவளை அவள் குழந்தையோடு கொழும்பின் பிரதான நவீன சந்தையில் கண்டான். அப்போது ஜனனி வெளிநாட்டில் இருந்து வந்த மணமகன் ஒருவரின் மனைவியாக அழகிய பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகி தாயக மண்ணில் சுற்றுலாவுக்காக வந்திருந்தாள்.

அவளைக் கண்டதும் இதயம் இழகி கண்கள் பனிக்க.. கண்களால் மட்டும் பேச முடிந்த சோகத்தை வெளிக்காட்டி.. தூர நின்றே அவதானித்து விட்டு.. அவள் கண்களில் படாமல்.. அவன் நினைவுகளை அவள் கிளறிடாமல் இருக்க தன்னை அவள் கண்களில் இருந்து மறைத்து அவ்விடத்தை விட்டே நகர்ந்தான்... அன்று அவள் போட்ட புதிருக்கு விடை கண்டவனாய்..ஜெகன்..!

ஆக்கம் தேசப்பிரியன்.

1 comment:

Anonymous said...

கதை அருமை. தொடர்ந்து தாருங்கள்.