Tuesday, January 17, 2006

வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!

வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!



பார் போற்றும் சிங்கமே
பரராஜ சிங்கமே
சிங்களச் சீமையில்
சிம்மக்குரலாய்
ஈழத்தமிழன் துயர் சொன்னவனே
இன்று ஈனத்தனத்துக்கு
இரையாகி வீழ்ந்தாயோ...??!

அகிலம் உன் ஆங்கிலத்துக்கு
அருவருக்காமல் செவிமடுக்கும்
அந்நியத்தனம் இன்றி
அனைவரையும் அரவணைக்கும்
அற்புத சீலன் நீ
அர்த்த ராத்திரியில்
கர்த்தரின் பூஜையில்
கருணையே அற்றவனின்
கருவிக்கு இலக்காகினையோ..??!

எத்தனை ஆண்டுகள்
ஈழ்த்தமிழரின் அகிம்சைக் குரலாய்
அகிலம் உற்று நோக்க
சிங்களப் பாசறை நடுவில்
சிங்காரத் தமிழனாய்
நடை பயின்றவன் நீ
சீண்டிப் பார்ப்பவன்
தூண்டலைக் கூட
தனித்து தாங்கியவன்
அணையாப் புன்னகையால்..!

வடக்கென்ன கிழக்கென்ன
தமிழ் தேசியத்தின்
உயிர் மூச்சாம்
உந்தன் உறவாம் ஈழத்தமிழன்
குருதி சொட்டினால்
ஈனக்குரல் செவி தட்டினால்
உடனே உறுமி எழுவாய்
நியாயம் கேட்டே வரிந்து நிற்பாய்
தாமதமின்றி உன் பணி செய்துகிடப்பாய்...!

உந்தன் குரலுக்கு
குலைநடுங்கிச் சிங்களம்
வைத்த விசாரணைக் கமிஷன் எத்தனை..!
உன் குரலுக்கு அடங்கிய
துப்பாக்கிகள் எத்தனை...!
சாக்குப்போக்கு உன்னிடம் பலிக்காது
தூய கரமும்
தூய உள்ளமும்
வணங்கா முடியும்
ஈழத்தமிழனின் குணமென்று
அரசியல் களத்தில்
சாதித்துக் காட்டிய
சாதனை நாயகன் நீ..!

கருவி தரித்த
சிங்களப் பாதுகாப்பு
சீ... என்று உதறியே
சொந்த மண்ணில்
மக்களுக்காய் மூச்சிழுத்தவன்..!
மூடர்கள் சிலரின்
முட்டாள் தனத்துக்கு
மூச்சையளித்தாயோ..??!
மூச்சிறைத்து விழுகிறோம்
உன் வீழ்ச்சி கண்டுமே
அநாதைகளாய்....!
வீரனே நீ மீண்டும் வா
மீண்டு வா
எம் ஆன்மா தந்து
அணை போடுகிறோம்...!


படம் - சங்கதி.கொம்

2 comments:

tamil said...

மறைந்த மாமனிதரை நினைவு கூர்ந்த வேளையில்... அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்.

kuruvikal said...

உங்கள் வருகைக்கும் மறைந்த மாமனிதரின் நினைவில் கலந்து தந்த கருத்துக்கும் நன்றிகள்.