Friday, May 15, 2015

முள்ளிவாய்க்கால் பேய்கள் வாழும் பூமியில் இருந்து ஓர் உயிர் பேசுகிறது..

முள்ளிவாய்க்கால்
காற்றிடை வாழும்
உயிர் பேசியது..

உலோகத் துகள்களிடை
உடல் துகள்களாகி சிதறி நிற்க
காற்றுக் கூட அவதிப் பட்டது
அகதியாகி
சன்னங்களிடை தன் இடம் பிடிக்க.

இட நெருக்கடியில்
உயிர்கள் உரசிக் கொண்டன
செல்லுமிடம்
சொர்க்கமோ நரகமோ
திசைகள் தெரியாமல்
சன்னங்களில் அவை
படுத்துறங்கின.

ஊழியக் காலமோ
கலி காலமோ
அல்ல அல்ல..
தமிழர் அழிப்புக் காலமாய்
அது நிகழ்ந்து கொண்டிருந்தது..!

சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன
சதா மரண ஓலங்கள்
உலகை ஆளும் அலைகளின்
ஊளைகளை தாண்ட வழியின்றி
களைத்தே மெளனித்தன.
உலக மானுட மனச்சாட்சி
கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...!

மீண்டும்.. காற்றிடை வாழும்
உயிர் பேசிக் கொண்டது..

அந்தக் கொடுமையின்
தாண்டவம் கண்டு
ஆண்டுகள் ஆறு கடந்தாயிற்று..
ஆன்ம அமைதிக்கு கூட
அங்கு வழியில்லை.!

உரிமை தேடிய
சக மனித அழிவினில்
சரித்திரம் படைத்திட்டதாய்
அமைதி காத்திட்டதாய்
சமாதானம் சாந்தி அடைந்திட்டதாய்
எழும் சலசலப்புகள் அடங்கவில்லை.

புழுதி கிளம்பும் மண்ணில்
எழுந்து நிற்கும்
வெற்றிக் கோபுரங்களின் உச்சியில்
பேய்கள் வாழ்வது தெரியாமல்
உலகம் உறங்கிக் கொள்கிறது.!

கண்ணிமைப் பொழுதினில்
அழிந்து போன
தன் உடலைத் தேடும்
உயிர்கள் அங்கு..

தன் உடல் அழிப்புக்கான
நீதியைத் தேடி
பேய்களாகி
அந்தக் கோபுரங்களில்
வீடு கட்டி வாழ்கின்றன..
எத்தனை கண்கள்
காணும் அவை...!