Thursday, March 20, 2008

நேருவின் பேரனிடம் நீதி கேட்டவள்...



தெந்தமிழீழத் தாயவள்
செருக்களம் போயினள்
உடலினில் குண்டு சுமந்தல்ல..
வயிற்றினில் பசி சுமந்து..
நெஞ்சினில்
புதல்வர் தம் உணர்வோடு..!

தமிழீழ விடுதலைக்காய்
மாமாங்கம் தனில்
மங்கை அவள்
தனித்து நின்று
துணிந்து திறந்தாள்
சாத்வீகப் போர்க்களம்.

காந்திய தேசத்தின்
ஆக்கிரமிப்பு இராணுவம்
தமிழீழ மகளிர் தம்
மானம் குதறுகையில்
பொங்கினள் பூபதி அம்மா
நேருவின் பேரனிடம்
நீதி கேட்டு..!

தாயவள் பசியினில் துடிக்கையில்
நேருவின் பேரன்
நெஞ்சினில் களிப்புடன்
தமிழின அழிப்பினில்
கழித்தனன் காலத்தை டில்லியில்..!

நாட்கள் கழிகையில்
பொங்கிய பூவவள்
பூகம்பமாய் சிதறினள்
சாவினில் சரித்திரம் படைத்திட்ட
தமிழீழத் தாயவளாய்
மின்னினள் தமிழீழ வானில்.

அன்னையவள் இட்ட
சுதந்திரத் தீயினில்
பூவையர் திரண்டனர்
புலிகளாய்..!
தமிழீழ தேசத்தின்
ஒளி விளக்குளாய்..!

விடுதலைப் பயணம்
இன்னும் முடியவில்லை...
தொடரும் ஆதிக்கக் கரங்களின்
அடங்காத வெறிக்கு
முடிவு வரும்..!
முடித்து வைப்போம்
அன்னையவள் கனவினை..!
சத்தியம் செய்வோம்
அம்மா பூபதி
நினைவினை மனதினில்
சுமந்துமே..!


இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்திறந்த தெந்தமிழீழத் தாய் அன்னை பூபதி அவர்களின் 20ம் ஆண்டு நினைவுக் கவிதை யாழ் இணையத்தில் இருந்து...

1 comment:

kuruvikal said...

மேலுள்ள "gardagami" என்ற வலைப்பதிவர் நாமமுடையவரின் பின்னூட்டலில் கணணிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கிருமி இருப்பதால் அவரின் பின்னூட்டல் நிராகரிக்கப்படுகிறது.

நன்றி. குருவிகள்.