Monday, November 26, 2007

தமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.



செந்தனல் பொங்கும் விழிகள்..
செருமி நிமிரும்
அவன் நெஞ்சின் உறுதி..!
செம்மை தம் வாழ்வு
செந்தமிழ் மண்ணின் விடுதலை
சேயவன் சிந்தனை..!
செல்லம் அவன்
எங்கள் ஈழத்தாயின்
மூத்த மகன்..!
அண்ணன் பிரபாகரன்
வாழிய என்றும்
மக்களின் மனங்களில்
வெற்றி எனும் முரசம் முழங்க..!


பட உதவி: பதிவு.கொம்

Wednesday, November 21, 2007

வீர தீபம் கார்த்திகை 27



தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.


Friday, November 09, 2007

பெரியார் படக் காட்சி அறிவியலுக்கு விரோதமானது.

அண்மையில் பிரித்தானியா University of Utah நடத்திய ஆய்வில் இருந்து குறைந்தது மாதம் ஒரு முறை விரதம் அல்லது உண்ணா நோன்பிருப்பது இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Fasting for one day a month 'cuts the risk of heart attack'

Skipping meals once a month could help stave off a heart attack, say scientists.

Fasting for at least 24 hours cuts the risk of coronary artery disease by up to 40 per cent, compared with those who eat every day, research shows.

Experts believe the break from food could help 're-set' the body's metabolism, enabling it to work more efficiently as a result.


மூலப் பிரதிக்கான இணைப்பு.

ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட "பகுத்தறிவு" வாதி என்று பெயர் சூட்டப்பட்ட பெரியார் என்ற ஈ வெ ராமசாமி நாயக்கரின் வாழ்க்கைக் குறிப்புப் பற்றிய படத்தில் விரதங்கள் மூடநம்பிக்கைகள் என்ற பாங்கில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை எள்ளளவும் அறிவியல் பகுப்பாய்வுப் பார்வைக்கு உட்பட்ட காட்சியமைப்பாகக் காண முடியவில்லை. இந்த பகுத்தறிவுப் பரப்புரைக்கு மாறானதாக அறிவியல் ஆய்வு வெளிப்பட்டிருப்பதானது பகுத்தறிவென்று மக்களை அறிவியல் சிந்தனைக்கு அப்பால் இட்டுச் செல்லும் மூடத்தனமான செயலைச் செய்வதாகவே நோக்க வேண்டியுள்ளது.

இவ்வதானிப்புக் குறிப்பை தருவது சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பு.

Saturday, November 03, 2007

வெந்தனல் மீது வேங்கை போனது....



வெந்தனல் மீதினில்
புலி போனது
செந்தனலானது விழிகள்
சுந்தரத் தமிழீழமதில்
சிங்களம் ஆடுது போர்வெறி..!

சரித்திரம் படைத்திடும்
இது தமிழ் இனம்
சிங்களச் சேனைகள்
சிதறிடும் வேளையில்
சிரிப்பின் செல்வனே
தமிழ்ச்செல்வா
நீ இன்னும் சிரிப்பாய்..!

மில்லர்
திலீபனுடன்
ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
உன்னுடன்
விடியலின் வேளையில்
தமிழீழ தேசத்தின்
ஒளிர்வதில்
தங்க மேனிகளாய்
மிளிர்வீர்கள்...!

தமிழ் பிஞ்சுகள்
நெஞ்சுகள் சுமந்திடும்
நினைவுகள்
தாங்கிடும்
வேங்கைகள் உங்கள்
வீர நினைவுகள்.

மரணத்தின் பின்னொரு
வாழ்வது காண்பீர்
தாயக விடுதலையின்
புனித பயணத்தில்
பாதையில் வித்தான
மாவீரர்களே...!

உறங்குங்கள் இன்று
தமிழர் வீர வரலாறு
காவியமாகிடும்
வேளையில்
மீண்டும்
துயில் எழுப்புகிறோம்
வீர பரணி பாடியே..!


Thursday, November 01, 2007

ஈழத்தமிழரை பலவீனப்படுத்த புகுத்தப்படும் தலித்தியம்.

ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின்... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது.

ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றனர்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது வெறுமனவே சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கத்துக்குள் இருந்தான விடுதலை என்பதற்கும் மேலாக அனைத்து வித சமூக விடுதலையையும் ஒருங்கிணைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்ந்து வந்துள்ள காலக்கட்டங்களில் கூட எழாத தலித்தியவாதம் இன்று புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சிலரால் புகழுக்காகவும் பிற தீய சக்திகளின் தேவைக்காவும் முன்னிறுத்தப்படுவது குறித்து ஈழத்தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த சக்திகளுக்கு பிபிசி தமிழில் உள்ள சில இந்திய தலித்தியவாத சுவாசத்தில் குளிர்காய்பவர்களும் பிரச்சார அனுசரணையாளர்களாக இருந்து பாரீசில் நடந்த ஒரு குட்டி மாநாட்டுக்கு பெரிய தோற்றம் கொடுக்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஈழத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை மூடிமறைத்து தமிழர்களின் அடிமைத்தனத்தை மறைத்து அரசியல் செய்ய முனைந்த முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள், சாதி மற்றும் பிரதேச வாதங்களை முன்னிலைப்படுத்தி மக்களை பிரித்தாண்டு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

ஆனால் அந்தக் குள்ள நரி அரசியல்வாதிகள் ஈழப்போராட்ட சக்திகளின் உருவாக்கத்துக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் அந்நிய தேசங்களுக்கு ஓடிப்போயினர்.

மீண்டும் கருணா போன்ற சந்தர்ப்பவாத தமிழினத் துரோகிகள் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்து தமிழீழ தேசத்தை இரு கூறாக்கி தமிழர்களின் பாரம்பரிய நிலத்தொடர்ச்சியை சிதைக்க முனையும் சர்வதேச மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு உதவி தங்கள் சொகுசு வாழ்க்கையை தீர்மானிக்க முற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்..

தலித்தியம் என்ற போர்வையில் தலித் மக்கள் என்று தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவித்து ஆழப்படுத்தி தமிழ் தேசியத்தின் வழி ஒற்றுமைப்பட்டுள்ள ஈழத்தமிழ்மக்களை தலித்து சாதி என்ற சமூகப் போலிகளால் கூறுபோட்டு பிரித்தாண்டு தமிழ் தேசிய இருப்பை இந்தியாவில் சீரழித்தது போன்று ஈழத்திலும் சீரழிக்க சில அந்நிய சக்திகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் முனைப்புக்காட்டி வருவதை இன்று அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஈழத்தைப் பொறுத்தவரையும் புலம்பெயர் தேசங்களைப் பொறுத்தவரையும் மனித அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் இருப்பிடம் உணவு போன்றவற்றிற்கு எந்த சமூகப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை. தகமை அடிப்படையில் தொழில் வழங்குதல் என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை வழங்கியுள்ளது. ஈழத்தில் இலவசக் கல்வி மூலம் எல்லா மக்களுக்கு கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி அறிவுமிக்க சமூகம் ஒன்றில் தலித்தியம் என்ற பிரிவினை நோக்கம் கொண்ட தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தக் கூடிய நச்சுக் காரணி ஒன்றை உள்நுழைப்பதையிட்டு மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் தமிழ் தேசியத்தை, இந்தியாவில் திராவிட வாதம், இந்திய தேசிய வாதம் மூலம் சீரழித்தது போன்று ஈழத்திலும் பிரதேசவாதம் தலித்தியவாதம் என்ற சமூகப் பிரிவினைவாதங்களை உள்நுழைத்து சீரழிக்க முனைவதற்கு இடமளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்றி இந்த தலித்தியவாதத்தை ஈவெ ராமசாமி அடியார்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ள விரும்பும் சில தமிழீழ தேச விரோத சக்திகள்... ஈழத்தமிழர் மத்தியில் பிரிவினையை விரும்பும் சக்திகள் "தலித்திய உரிமை வேண்டுதல்" என்ற கவர்ச்சிகர தலைப்பின் கீழ் ஈழத்து தமிழ் மக்களுக்குள் சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தி அதனை தங்கள் சுய இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்.

தலித்தியம் என்பதன் மூலம் புலம்பெயர்ந்துள்ள எமது எதிர்கால சந்ததிக்குள்ளும் சாதியப் பிரிவினை என்ற நச்சு விதையை ஊன்றிவிட முனைகின்றனர். தமது வெட்டிப் புகழுக்காக ஈ வெ ராமசாமியை தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்தக் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்திலும் சாதிய அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு அந்நிய சக்திகளுக்கும் அவர்களின் தேவைக்கும் ஏற்ப, தமிழ் தேசிய அடிப்படையில் அமைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை.. ஆதரவுத்தளத்தை கூறுபோட அல்லது பலவீனப்படுத்த வழிவகைகளை செய்ய முற்படுகின்றனர்.

இந்த சக்திகள் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், ஈழத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் மூலம் பிரதேச சாதி மத சமூக பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்திருப்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை தமிழர்கள் என்ற வகையில் தமது தேசத்துக்காக தொடர்ந்து வழங்கி வருவதையும் முழு உலகுக்கும் என்றும் தமது ஒற்றுமையின் மூலம் எடுத்துக்காட்ட முனைய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துக்காட்டி அவர்களை தனிமைப்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முனையும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் சிங்களப் பேரினவாதிகளும் இப்படியான சமூகப் பிரிவினைகளைத் தூண்டும் கும்பல்களை "சமூக உரிமைக் காப்புப் பணி" என்ற வகைக்குள் அடக்கி அதற்கு மனிதாபிமானச் சாயம் பூசி ஆதரவளித்து வருகின்றதை பாரிஸ் தலித்திய மாநாட்டுக்கு பிபிசி தமிழ் அளித்த முக்கியத்துவம் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்கள் பெரும் தியாகங்கள் மூலம் கடந்த 3 தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய கட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவ்வகைச் சூழ்ச்சிகளை மதிநுட்பத்தால் புரிந்து கொண்டு இவற்றில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இந்த போலி வேசக்கார அருவருடிகளின் செயல்கள் தொடர்பில் வழிப்புணர்வுடன் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனையும் ஒட்டு மொத்த சக்திகளுக்கும் பதிலடி வழங்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது இனத்துக்கான விடுதலையை உணர்ந்த எமக்கு எமது சமூகத்துக்கான உரிமைகள் தொடர்பில் இவர்கள் பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதை இப்படியான சக்திகளின் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கும் உணர்த்தி இவர்களை உலகுக்கும் இதர தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சரிவர அடையாளம் காட்ட வேண்டும். தலித்தியம் பேசி தமிழ் மக்களை கூறு போட முனையும் எல்லா சக்திகளுக்கும் இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். அதற்கான கடமை தமிழ் மக்களின் கையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து செயற்படுவீர்களாக.

யாழ் இணையம்.