Wednesday, November 22, 2006

போராளிகள் - வன்னித்தென்றல்

போராளிகள்"விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்" என்ற வார்த்தைகள் மட்டும் சங்கரின் காதில் எதிரொலித்தபடி இருந்தது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்ட அந்தச் சம்பவம் மட்டுமே அவனின் நினைவுகளில் தற்போது ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது.

சங்கர் பிறந்தது மட்டக்களப்பில் ஒரு சின்னக் கரையோரக் கிராமத்தில். அக்கிராம மக்களின் பிரதான தொழிலே மீன் பிடிதான். தாய் பார்வதியும் தகப்பன் ஜோசப்பும் பல காலம் குழந்தைகளின்றி இறுதியில் சங்கரைப் பெற்றெடுத்தனர்.

மீன்பிடித்தொழிலில் செய்வோர் பலரிடம் வறுமை என்பதும் ஒட்டிப்பிறந்த ஒன்றுதானே. பார்வதி யோசப் குடும்பமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

தினமும் கட்டுமரத்தோடு மட்டு வாவியில் இறங்கி கரை சேரும் போது கொண்டு வரும் கடலுணவோடுதான் அவர்களின் ஜீவனமே. பரம்பரை வீடொன்று பார்வதிக்கு சீதனமாகக் கிடைத்திருந்ததால் அதுதான் முழுக் குடும்பத்துக்கும் நிழலாகி நின்றது இறுதிவரை.எத்தனை கடன்படினும் வீட்டையும் அதனுடன் கூடிய நிலத்தையும் அவர்கள் காப்பாற்றத் தவறவே இல்லை.

வழக்கம் போல அன்றும் விடியலின் வேளைக்காக அக்கிராமம் காத்திருந்தது. அமைதியான இரவின் நிசப்தத்தை காக்கைகளின் கரைதலும் குருவிகளின் கீச்சிடுதலும் குழப்பிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நத்தார் விடியல் என்பதால் ஜோசப் அன்று தொழிலுக்கு செல்லவில்லை.

நத்தார் என்பதால் ஜோசப் வழமையை விட கொஞ்சம் நேரத்துடனேயே கண் விழித்துக் கொண்டார். படுக்கையில் விழித்தபடி எழும்புற பஞ்சியியில் இருந்த அவரால் அன்று வழமைக்கு மாறாக இயந்திரப்படகுகளின் ஓசையைக் கேட்க முடிந்தது. "விடியத் தானே போகுது.. கரை போய்... என்ன பிரச்சனையோ தெரியல்ல பார்ப்பம்..போட் சத்தமா இருக்குது" என்று உறங்கிக் கொண்டிருந்த மனைவி பார்வதியையும் சிறுவன் சங்கரையும் குழப்பாமல் வீட்டை விட்டு மெதுவாக வெளியேறி வாவிக்கரை நோக்கி... புதினம் பார்ப்பதற்காக நடக்கலானார். வாவிக் கரையை அடைந்தவருக்கு திகைப்புக் காத்திருந்தது.

சங்கர் குடும்பம் வாழ்ந்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கும் பொடியங்களின் கட்டுப்பாட்டுக்கும் இடைப்பட்ட பகுதி. இரவோடு இரவாக பொடியங்களின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகர்வதற்காக நேவியும் ஆமியும் அங்கு நகர்ந்திருப்பது அறியாமல் ஜோசப் வாவிக் கரையை அடைந்ததும் தரையோடு தரையாக நிலையெடுத்திருந்த ஆமிக்காரங்கள்.."டோ.. மே எண்ட..ஒயா எல் ரி ரி ஈ த (டேய் இங்க வா..நீ புலியா)" ..என்று கத்திய படி அவரைச் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்த போதே அவர் தான் ஆமியிடம் சிக்கி சிக்கலில் மாட்டிவிட்டத்தை உணர முடிந்தது.

"ஐயா எனக்கு சிங்கள தன்னா (ஐயா எனக்கு சிங்களம் தெரியாது).. இங்க தான் என்ர கட்டுமரம் விட்டனான் பார்க்க வந்தன் " என்று அவர் ஆமிக்காரங்களை நோக்கி தனக்குத் தெரிந்த சிங்களத்தைக் கலந்து தமிழில் பதில் சொன்னார். அதற்கு அவர்கள்... "ஒவ் ஒவ் ஒயா தெமிழ கெட்டி நெய்த... எல் ரி ரி ஈ சப்போட்..மே தங் அப்பி எல் ரி ரி ஈ கென்றோல் ஏரியாட்ட யன்டோன..அப்பிட்ட உதவுக் கரண்ட புளுவந்த?" ( ஓம் ஓம் நீங்கள் தமிழ் என்ன..புலிக்கு சப்போட். நாங்க இப்ப புலிட பிரதேசத்துக்கு போக வேணும்..உதவுவிங்களா?) என்று அச்சுறுத்தும் பாணியில் கேட்டனர். இதை விளங்கிக் கொண்ட ஜோசப்.."எனக்கு எல் ரி ரி ஈ எங்க இருக்கு என்று தெரியா" என்று தமிழில் சொன்னார். அதற்கு அவர்கள் புலிகளால் காயப்பட்ட எங்களுக்கு உதவில்லை என்றால் உன்னைச் சுட்டுவிடுவோம் என்றனர்.

தான் மீள முடியாத ஆபத்தில் சிக்கிக் கொண்டதை உணர்ந்த ஜோசப் ஓடித் தப்பிக்கவும் சந்தர்ப்பம் இல்லாததால் தன் குடும்பத்தை நினைத்துப் பார்த்தார். தன்னையே நம்பி வாழும் மனைவி பார்வதி... சின்னப்பிள்ளையான சங்கர் என்று அவர்களின் நிலையையும் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்த்து விட்டு.."இவங்களுக்கு உதவப் போனாலும் ஊருக்கு கஸ்டம் ஆகிடும்... எனக்கும் பிரச்சனை தான் மிஞ்சும்..தொடர்ந்து தங்களோட இருக்கச் சொல்லி மனிதக் கேடயமாகக் கூட்டிக் கொண்டு போவாங்கள்" என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் துப்பாக்கிகள் முழங்க ஆரம்பித்தன. ஜோசப் நின்ற பகுதியை நோக்கி சன்னங்கள் கூவிக் கொண்டு வந்தன. "பொடியள் சுடத்தொடங்கிட்டாங்கள்... என்ன நடக்கப் போகுதோ" என்று யோசிப்பதற்கிடையில் அவரை நோக்கி நீண்ட ஆமிக்காரனின் துப்பாக்கி கக்கிய ரவைகள் அவரின் உடலைப் பதம் பார்க்க..உயிரற்ற உடலாக ஜோசப் சொந்த மண்ணில் குருதி பொங்கி வழிய வீழ்ந்தார்.

அவர் வீழ்ந்த பின்னும் துப்பாக்கிச் சண்டை விடாமல் தொடர்ந்தது. அது உக்கிரமடையத் தொடங்க நேவி தன் பங்குங்கு "கன்போட்" கொண்டு தாக்க ஆரம்பித்தான். நேவி ஏவிய குண்டுகள் கரையோரக் கிராமங்கள் எங்கும் விழுந்து வெடிக்கத் தொடங்கின. துப்பாக்கிச் சத்தங்களையும் குண்டுச் சத்தங்களையும் கேட்ட ஜோசப்பின் மனைவி பார்வதி கண் விழித்துக் கொண்டதோடு..பதட்டத்தில்.. கணவன் இன்னும் வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு.. "என்னங்க எழும்புங்க ஆமி அடிக்கிறான் போலக்கிடக்கு" என்று தூக்கம் கலைந்தும் கலையாததுமான நிலையில்.. பதறி அடித்துக் கொண்டு சங்கரையும் அவசர அவசரமாக தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். அப்போது நேவி ஏவிய குண்டோன்று அவர்கள் வீட்டருகில் வீழ்ந்து வெடிக்க தலையில் காயப்பட்ட பார்வதி கையில் தாங்கிய சிறுவன் சங்கருடன் மண்ணில் சாய்ந்தார்.

சிறிது நேர அகோரச் சண்டையின் பின்னர் நேவியும் ஆமியும் தங்கள் நோக்கம் நிறைவேறாமல் பின் வாங்கிச் சென்றனர். மீட்புப் பணிக்காக வந்த போராளிகள் கரையோரத்தில் உயிரற்றுக் கிடந்த ஜோசப்பின் உடலையும் வீட்டருகில் உயிரிழந்து கிடந்த பார்வதியின் உடலையும் இன்னும் பல இறந்த பொது மக்களின் உடல்களையும் சேகரித்து மோசமாகக் காயப்பட்ட பொதுமக்களையும் பொறுக்கி எடுத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாயின் உயிரற்ற உடலருகே கையில் சிறுகாயங்களோடு அழுது கொண்டிருந்த சங்கரையும் போராளிகள் மீட்டு... முதலுதவி அளித்து... சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறுவர் காப்பகத்தில் வளர்ந்த சங்கருக்கு மற்றைய பிள்ளைகளைப் போலவே தாய் தந்தையரப் பிரிந்த சோகம் மனதில் இருந்தாலும் அது வெளிப்படாத வகையில் கவனிப்பு இருந்தது. அவனும் சோகங்கள் மறந்து தனிமை மறந்து பள்ளி சென்று வந்தான். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அவன் போராளிகளின் பயிற்சிப் பாசறையில் இணைய விரும்பி பயிற்சியும் பெற்றுக் கொண்டான்.

பயிற்சியின் போது தனது முழுத்திறமைகளையும் வெளிக்காட்டி பயிற்சியாளர்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டான். அவனிடமிருந்த அரசியல் தெளிவை கண்டு கொண்ட போராளித் தலைவர்கள் அவனை மட்டக்களப்பில் சிறிது காலம் அரசியல் பணியாற்ற நியமித்தனர். சுமார் ஆறு மாத காலங்கள் தனது அரசியல் பணியைச் செய்த சங்கர் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

யாழ்ப்பாணத்தில் யாழ் நகரில் தான் அவன் தங்கி இருந்த முகாம் அமைந்திருந்தது. அந்த முகாமருகே ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு ஒரு மூதாட்டி கணவனை இழந்த நிலையில் தனது பிள்ளைகள் மூவரையும் கனடா ஐரோப்பா என்று வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தார். சங்கர் தினமும் காலையில் உடற்பயிற்சி முடித்து பத்திரிகையோடு முகாம் வாசலில் நிற்கும் போதெல்லாம் அந்த மூதாட்டியைக் காண்பது வழக்கம். அவரும் சங்கரிடம் ஊர்ப்புதினங்கள் கேட்பார். அது மட்டுமன்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது சொந்தப் பிரச்சனைகளை எல்லாம் சொல்லி ஆறுதல்படுவார். சங்கரும் அவரோடு தனது சொந்தக் கதைகள் பேசுவான். அதனால் இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வும் பேரன் பேத்தி பாச நிலையும் உருவானது. சங்கர் மேலெழுந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் சக போராளிகள் மீதும் அந்த மூதாட்டி நல்ல மரியாதைகளைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலையில் தோசையும் சுட்டு சம்பலும் அரைத்துக் கொண்டு போராளிகளுக்குக் கொடுப்பதற்காக முகாம் வாசலில் காத்திருந்த மூதாட்டியை போராளி ஒருவர் கண்டு.. "என்னம்மா..கன நேரமா காத்திருக்கிறீங்கள் போல..சங்கர் அண்ணாவையா பார்க்க விரும்புறீங்கள்?"

"ஓம் மகன் சங்கரை மட்டுமில்ல உங்களை எல்லாம் தான் பார்த்து இந்தச் சாப்பாட்டைக் கொடுப்பம் என்று வந்தன்" என்று கூறி பாசலை நீட்டினார்.

அதற்கு அந்தப் போராளி "அம்மா சங்கர் அண்ணாவும் இங்க இருந்த இன்னும் 15 போராளிகளுமா ஆனையிறவுப் பக்கம் சண்டைக்குப் போயிட்டினம். அங்க இருந்து ஆமி யாழ்ப்பாண நகரை நோக்கி வர முயலுறான்... அதைத் தடுத்து நிறுத்திற சண்டையில பங்கெடுக்கப் போயிட்டினம் " என்று கூறி சாப்பாட்டுப் பாசலை வாங்கவே மனசிமில்லாமல் முகத்தில் வாட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.

இதை அவதானித்த மூதாட்டி.."அப்படியே மகன்.. அப்ப நான் சங்கரும் அந்தப் போராளிப் பிள்ளையளும் திரும்பி வந்த பிறகு வாறன் என்ன... அவை வந்த உடன ஒரு குரல் கொடுத்துச் சொல்லு மகன்" என்று கூறிவிட்டு கொண்டு வந்த பாசலோடு வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மனசுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு.. "நானும் இரண்டு பொடியளைப் பெற்றனான்.. ஒரு பொம்பிளைப் பிள்ளை பெற்றனான். அதுகள் பிரச்சனை என்று கண்ட உடன நாட்டை விட்டு ஓடத்தான் நின்றதுகளே தவிர... நாட்டைக் காக்க வேணும் என்று நினைக்கல்ல"...." இந்தப் பிள்ளையள் எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்து இத்தனை துன்பங்களையும் சுமந்து கொண்டு இப்ப போராளிகளா தங்கட நாட்டைக் காக்கப் போராடுதுகள்"....."ஆனால் என்ரையள்.. அதுவும் என்ர கடைசி ரமணன்... கனடாவில வெள்ளைக்காரியைக் கட்டிக்கொண்டு என்னையே மறந்திட்டான்....எல்லாம் நானும் என்ர மனிசனும் கஸ்டப்பட்டு அவைக்கு கஸ்ரம் என்றால் என்னென்று தெரியாம வளர்த்தால வந்தது.....தாய் நாட்டு மேல பற்று இல்லாம சொகுசைக் காட்டி வளர்த்திட்டம். அதால அதுகளுக்கு தாய் நாட்டு மேலவும் பற்றில்ல தாய் மேலயும் பற்றில்லாமல் போச்சு.... வெறும் உலக டாம்பீகமே வாழ்க்கையாப் போச்சு"

"அதுகளைப் பொறுத்தவரை வாழ ஒரு இடமிருந்தாப் போதும். அது எங்க இருந்தாலும் சரி. வசதிகளும் வாய்ப்பும் உள்ள இடத்தை நோக்கி ஓட நினைக்குதுகளே தவிர அதை ஏன் தன்ர தாய் மண்ணில உருவாக்கப் பாடுபட நினைக்குதுகள் இல்லையோ தெரியாது"

"இதாலதான் நான் சொல்லிப்போட்டன் எனக்கு கனடாவும் வேண்டாம் ஐரோப்பாவும் வேண்டாம் என்று... என்ர அம்மா. அப்பா காலத்தில வெள்ளைக்காரன் இங்க இருந்தவன். அவனுக்கு இங்க செல்வம் இருந்தது. இருந்தாலும் அவன் இந்த நாடுகளை தன்ர நாடென்று சொந்தம் கொண்டாட முயல்ல. செல்வங்களை மீட்டு தன்ர நாட்டுக்கு அனுப்பினான். ஆனால் எங்கட பிள்ளையள் சொந்த நாட்டை விட்டிட்டு அந்நிய நாட்டில சொந்தம் கொண்டாட நினைக்குதுகள். ஒரு கனம் சிந்திச்சுதுகளா.. நாங்கள் ஆமி வர ஓடுறமே ஏன் ஆமி இங்க வாறதில அக்கறையா இருக்கிறான் என்று.. தவிர அவன் ஏன் வெளிநாட்டுக்கு ஒட நினைக்கல்ல என்று. எங்கட பிள்ளையளுக்கு சுயநலத்தை ஊட்டி வளர்த்திட்டம். எனி என்ன செய்யுறது.."

"பாவம் இந்தப் பிள்ளையள். இந்த வெய்யிலுக்க அந்த வெளிக்க என்ன கஸ்டப்படுகுதுகளோ...நல்லூருக் கந்தா.. இந்தப் பிள்ளையளுக்கு ஒரு ஆபத்தும் இல்லாமல் பத்திரமா வெற்றியோட திருப்பி அனுப்பி வை போர்க்களத்தில இருந்து" என்று கடவுளை வணங்கி தன்னை தானே தேற்றி தன் மனசுக் குமுறலையும் கொட்டி.... உணர்ந்த குற்றவுணர்வையும் அகற்ற முனைந்து கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.

பொழுதும் இரவானது. இரவு 11 மணி இருக்கும். வாகனங்கள் வந்து போராளிகளின் முகாம் வாசலில் நிற்கும் சத்தம் கேட்டு லாம்பையும் கொண்டு கேற் வாசலுக்கு வந்தார் மூதாட்டி. போராளிகள் அவசர அவசரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போ மூதாட்டியைக் கண்டுவிட்ட சங்கர்.."என்ன நீங்கள் இன்னும் நித்திரைக்குப் போகல்லையா அம்மா...?" என்று பாசத்தோடு கேட்டான்.

"இல்ல மகன்..நீங்கள் எல்லாம் சண்டைக்குப் போயிட்டியள் என்று ஒரு பிள்ளை சொன்னான். அதற்குப் பிறகு மனசெல்லாம் ஒரே யோசனை. என்ர செல்வங்களுக்கு என்ன கஸ்டமோ என்று. நீங்கள் எல்லாம் பத்திரமா வந்திட்டிங்களே ராசா. நான் நல்லூரானைக் கும்பிட்டுக் கொண்டே இருந்தனப்பு."

இதைக் கேட்ட சங்கர்...

ஐயோ அம்மா. எங்களுக்கு ஒன்றுமில்ல. நாங்கள் ஆமியை அடிச்சுக் கலைச்சிட்டு வந்திருக்கிறம். நீங்கள் போய் கவலைப்படாம சந்தோசமாப் படுங்கோ".

"இல்ல மகன்.. நீங்கள் எல்லாம் களைச்சுப் போயிருக்கிறீங்கள். கொறிலிக்ஸ் கரைச்சுக் கொண்டு வாறன் என்ன?" என்று உள்ளே சென்ற மூதாட்டி...முகாமில் சோக கீதம் இசைப்பதைக் கேட்டு பதறிப் போனார்.

கேற்றடிக்கு ஓட்டமும் நடையுமாய் வந்த மூதாட்டி.."தம்பி சங்கர் நிக்கிறானே. அவன் எனக்குப் பொய் சொல்லிப் போட்டான். ஏன் சோக கீதம் போடுறீங்கள்" என்று கேட்டார் வாசலில் நின்ற போராளிகளை நோக்கி.

"ஓம் அம்மா நாங்கள் உங்களுக்குச் சொல்லேல்ல. நீங்கள் மனசு கஸ்டப்படுவீங்கள் என்று. இங்க இருந்து போனதில எங்கட தம்பி ஒருவன் விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்து மாவீரர் ஆகிட்டார். அவர் எப்பவும் சொல்லுவார்..."நான் இந்த மண்ணின் தமிழிச்சியின் வயிற்றில் உருவாகினனான்..நான் இந்த மண்ணின் சொத்து...வீழ்ந்தாலும்... என் தாய் மண்ணில வித்தாகத்தான் விழுவன். என் வீரச்சாவில யாரும் அழக் கூடாது. என் வீரச்சாவில.. நான் நேசிக்கிற மக்கள் தங்கட சொந்த மண்ணில் ஒரு இரவைத்தானும் எதிரியின்ர கரைச்சல் இல்லாமல் நிம்மதியா கழிப்பினம் என்றால் அதுதான் எனக்கு செய்யுற மரியாதையா நான் பார்ப்பன்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதுக்கு மரியாதை அளிச்சும் உங்கட மனசு கஸ்டப்படக் கூடாதென்றும் தானம்மா சங்கர் அண்ணா சொல்லேல்ல." அவருடைய வித்துடல் இன்னும் வரேல்ல. விடியத்தான் வருமம்மா. நீங்கள் போய் இப்ப தூங்குங்கோ விடிய வந்து அஞ்சலி செய்யலாம்"

"இல்ல மக்கள்..எனக்கு தூக்கமே வரேல்ல. என்ர பிள்ளையைப் பறிகொடுத்தது போல இருக்கு. உங்களுக்குத் தெரியாது பிள்ளையள். நான் ஒவ்வொரு நாளும் நீங்கள் அணிவகுத்துப் போகேக்க உங்கள் முகங்களைப் பார்ப்பன். அதில எத்தினை சோகங்களுக்கும் மத்தியில புன்னகை இருக்கும். போராளி ஆகிறது என்பது சாதாரண ஆடம்பர வாழ்க்கைக்குள்ள வாழுறவையால முடியாத சங்கதி மக்கள். அதுக்கு தியாக உணர்வும் தன்னையே நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கிற மனமும் வேணும். உங்களை எல்லாம் இந்த 71 வயதிலும் நான் மனசில பதிச்சு வைச்சிருக்கிறன். நான் சாகும் போது கூட என்ர சொந்தப் பிள்ளையள நினைக்க மாட்டன். அதுகள் சொந்த தாய் மேல தாய் நாட்டு மேல அக்கறையில்லாத ஆடம்பர வாழ்க்கையை நேசிக்கிற உடல் சுகபோகிகளா மாறிட்டுதுகள். ஆனால் உங்கள எப்பவும் நினைப்பன் மக்கள்.."

இப்படி அந்த மூதாட்டி பேசிக் கொண்டிருக்கும் போது வாசலுக்கு வந்த சங்கர்.."அம்மா என்ன ஆச்சு உங்களுக்கு... கவலைப்படாதேங்கோ. நீங்கள் எல்லாம் சந்தோசமா வாழ வேணும் என்றுதான் நாங்கள் வீழுறம் மண்ணில. உங்கட பிள்ளைகளும் அவைட சந்ததியும் இந்த மண்ணிற்கு வந்து வாழ விரும்ப வேணும். அதற்கான சூழலை எங்கட தாய் மண்ணில உருவாக்கத்தான் நாங்கள் தலைவர் வழியில நிற்கிறம். எங்கள் மரணத்தில் சோகம் இருக்கலாம். ஆனால் கண்ணீர் எழக் கூடாது. காரணம் நாங்கள் வித்தாகத்தான் வீழுறம். மீண்டும் எழுவம் நினைவுகளாக. அது இந்த மண்ணில சுதந்திரக்காற்று வீசும் போது தான் எங்கள் மகிழ்ச்சிக்குரிய முறையில நடக்கும். நாங்கள் வீழ்ந்தாலும் நீங்களும் உங்களைப் போன்ற தாய்மாரும் தந்தைமாரும் தான் எங்கள் சந்தோசங்களைப் பெற்றுத் தர உறுதி வழங்க முடியும். நாளைக்கு அம்மா... எங்கள் உடல் எந்த களத்தில சிதறிச் சின்னாபின்னமாகுமோ தெரியாது. ஆனால் அந்தத் தசைத் துண்டுகள் ஒவ்வொன்றும் வித்தாக முளைக்க வேண்டும். நாங்கள் சுமக்கிற கனவுகளை நிறைவேற்றி வைக்க அணி அணியா புதியவர்கள் வர வேண்டும். தாய் மண்ணை மனித வேலி அமைச்சு காத்து நிற்க வேணும். அதுதான் நீங்களும் மக்களும் எமக்குச் செய்யுற அஞ்சலியம்மா."

இதைச் சங்கர் சொல்ல விழிகளின் நீர் கசிய பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மூதாட்டி...

"நிச்சயமா மகன் நான் உயிரோட இருந்தால் அப்படித்தான் செய்வன். நாளைல இருந்து நானும் சண்டைக்களத்திற்கு வந்து ஏதாவது என்னால முடிந்த உதவி செய்யுறன். ஒருவேளை தேத்தண்ணி வைச்சுத் தந்தால் கூட அதுதானப்பு எனக்கு எனி மன ஆறுதல். "

சரியம்மா உங்களை நாளைக்கு கூட்டிக் கொண்டு போறன் ஆனையிறவுக்கு. இப்ப போய் படுங்கோ. என்று ஆறுதல் சொல்லி அந்த மூதாட்டியின் கையைப் பிடித்த சங்கர் அவரை மெதுவாக நடத்தி வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போது...

"இன்றைக்கு பெரிய சண்டையே மகன் நடந்தது.."

"ஓம் அம்மா சரியான சண்டை. 80க்கும் மேல ஆமி இறந்திருப்பாங்கள். வாகனங்களையும் விட்டிட்டு ஓடிட்டாங்கள். அவங்களும் ஆரம்பத்தில சளைக்காமல் சண்டை பிடிச்சாங்கள். நாங்கள் உக்கிரமா அடிச்சாப் பிறகுதான் பின்வாங்கினாங்கள். அவங்கள் சம்பளத்துக்கு அடிபடுறாங்கள் என்று மட்டும் நினைக்கக் கூடாது. அவங்களும் வந்திட்டம் தங்கட உயிரைப் பாதுகாக்க வேணும் என்று சண்டை பிடிக்கத்தான் செய்யுறாங்கள்."

"அப்படியா மகன். அப்ப அவங்களுக்கு இழப்பு என்றால் இங்கால பொம்பரால வந்து அடிப்பாங்களே. எதுக்கும் உந்தக் காம்பில உள்ள "விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்". வீணா ஆபத்துக்களை வரவழைச்சு அநியாய உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்பட்டா என் போன்ற உங்களைப் பிள்ளையலா நினைக்கிற, சகோதரங்களா நினைக்கிற மக்களின்ர மனசு தாங்காது. எங்கட தமிழீழத் தாய் நாட்டைப் பாதுகாக்கிற விலை மதிக்க முடியாத செல்வங்கள் நீங்கள். உங்கள் மத்தியில அநாவசிய இழப்புக்களைத் தவிர்க்க வேணும் மகன்."

"ஓம் அம்மா..நிச்சயம் உங்களைப் போலத்தான் நானும் பல போராளிகளும் நினைக்கிறம். நன்றி அம்மா. எங்களோட பழகின குறுகிய காலத்துக்குள்ளேயே எங்களோட ஒரு போராளியா நீங்கள் உங்களை உணர்வால இணைச்சு வைச்சிருக்கிறதை நினைக்கேக்க மகிழ்ச்சியா இருக்கம்மா. உங்களைப் போலவே எல்லா தமிழ் மக்களும் போராளிகளோடு போராளிகளாயிட்டா இன்று விழுந்தானே தம்பி அவன் போன்ற மாவீரர்களின் கனவுகள் வெகுவிரைவில நனவாகிடும் அம்மா.

சரி அம்மா.. எனிப் போய் படுங்கோ..கவலைப்படாமல். விடிய வந்து அந்த மாவீரனுக்கு அஞ்சலி செய்யுங்கோ என்ன..." என்று அந்த மூதாட்டியை வீட்டின் விறாந்தையில் விட்டுவிட்டு வந்தான் சங்கர்.

பொழுதும் விரைவே விடிந்தது. சோக கீதங்கள் இசைக்க.. மாவீரனின் வித்துடல் முகாமில் அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்டது. போராளிகள் பொதுமக்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட தாயக்கபற்றோடு தாய் மண்ணில் வாழும் மக்கள் கலந்து கொண்ட இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் முடிந்து. அந்த முகாமில் இருந்த போராளிகளின் செல்லத் தம்பியான "தம்பியின்" வித்துடல் மாவீரர் துயிலும் இல்லம் நோக்கிப் புறப்பட இருந்த சமயம்..சங்கர் சக போராளியான தமிழவனைப் பார்த்துக் கேட்டான்.."தமிழ் எங்கட முன் வீட்டு அம்மாவைக் கண்டனியே இன்றைக்கு?"
"இல்லை சங்கர்..விடிஞ்சாப் பிறகு...அம்மாவை இப்ப வரைக்கும் கண்ட சிலமனில்ல. பாவம் இரவு நள்ளிரவு தாண்டியும் இங்க தானே நின்றவா..எங்க போயிருப்பா..?"

"அப்படியா அப்ப சரி. நேற்று இவன் தம்பியின் இழப்பைக் கேட்டு சோகமா இருந்தவா. அந்த அம்மா சரியா கவலைப்பட்டு உணர்ச்சி வசப்பட்டும் பேசினவா. ஒருக்கா அவாட வீட்டில போய் பார்த்துக் கொண்டு வாறன் என்ன நடந்ததென்று."

வீட்டுக்குள் சென்று பார்த்த சங்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மூதாட்டி சோகத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமலே விறாந்தையில் இருந்த சாய்மனைக் கதிரையில் நித்திரையோடு தன் உயிரையும் சோக நினைவுகளுக்குப் பரிசளித்து உயிர்திறந்திருந்தார்.
இதைக் கண்ட சங்கர் ஒரு போராளிக்குரிய முறையில்... பதறாமல்..மனதோடு சோகம் சூழ..ஒரு தெளிவுக்கு வந்தான்.

எங்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டிய இந்த அம்மாவும் போராளி தான். " பொம்பர் வரும் விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்" என்று எவ்வளவு அக்கறையோடு பாசத்தைக் காட்டிய ஒரு தமிழீழத் தாய் இந்த அம்மா. நிச்சயம் இந்த அம்மாவுக்கு போராளிக்குரிய மரியாதையை தேசம் வழங்க வேணும். தமிழீழத் தேசத்துத் தாய்மார்களில் இந்த அம்மாவுக்கும் ஒரு தனி இடம் அளிக்க வேணும் என்று அவருக்கு அந்த நிமிடத்திலேயே இறுதி வணக்கம் செய்து உறுதியும் பூண்டான் சங்கர். அதன்படி அவருக்கு ஒரு போராளிக்குரிய மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளையும் செய்து முடித்தனர் போராளிகள்.

மீண்டும்.. முகாம் வாசலில் நின்றபடி காட்டிய அன்பால் பாசத்தால் புரிந்துணர்வால் போராளி ஆகிவிட்ட முன் வீட்டு மூதாட்டியின் நினைவுகளோடு...சங்கர்

"இப்படி எத்தனை தாய்மார் தங்கள் பிள்ளைகளையும் தங்களையும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். விதைகளாக புனித விதைகுழிகளில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் தியாகங்கள்..போர்க்களத்தில் உடல் சிதைந்து போன போராளிகளின் தியாகங்கள் என்று எத்தனை தியாகங்கள் அவை ஒவ்வொன்றும் எத்துணை பெறுமதி வாய்ந்தவை. மக்கள் அவர்கள் எங்கு வாழினிலும் தமிழீழத் தமிழர்கள் என்ற வகையில் தங்கள் நினைவெனும் பூங்காவில் இவர்களை பூஜிப்பது மட்டுமன்றி அவர்களின் கனவுகளை நனவாக்க அவர்களின் பாதங்கள் நடந்த பாதையில் பயணிக்கவும் தயாராக வேண்டும். நாளை என்றல்ல இன்றே இந்த மாவீரர் நினைவுகளோடு அது நடக்க வேண்டும். அப்போதுதான் தம்பி போன்ற மாவீரர்களினதும் இந்த மூதாட்டி போன்ற தாய்மாரினதும் இன்னும் பிள்ளைகளைத் தேசத்துக்கு அர்ப்பணித்த தாய்மார்களினதும் எண்ணம் சாந்தி பெறும்...தமிழீழ விடுதலையும் துரிதப்படுத்தப்படும்" என்று தனக்குள் மீண்டும் மீண்டும் உறுதியாக எண்ணிக் கொண்டான்.

தேசப்பிரியன்- நன்றி வன்னித்தென்றல்

கதையின் மூலம் இங்கு

1 comment:

Anonymous said...

நிகழ்வுகளை நியமாகக் காட்டுகிறது கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.