Tuesday, January 31, 2006

ஹமாஸ் வெற்றி கிளப்பும் கேள்வி



இஸ்ரேலை நிர்மூலஞ் செய்வதைக் கொள்கையாகக் கொண்ட தீவிரவாத இயக்கமான ஹமாஸ் கடந்தவாரம் பாலஸ்தீன பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற உறுதியான வெற்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் நிலக் காட்சியை உலுக்கியிருக்கிறது. ஹமாஸ் கணிசமான எண்ணிக்கை ஆசனங்களைப் பெறும் என்று தேர்தலுக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பாலஸ்தீன சட்டப் பேரவையில் இந்த இயக்கம் அறுதி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றியடையும் என்று எவருமே எதிர்வு கூறியதில்லை.

132 ஆசனங்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 76 ஆசனங்களைக் ஹமாஸ் கைப்பற்றி பாலஸ்தீன அதிகார சபையை நிருவகிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது. இதன் மூலம் சுமார் 4 தசாப்தகாலம் பாலஸ்தீன மக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் மிகப்பெரிய அங்கத்துவ அமைப்பான பதாஹும் கொண்டிருந்த மேலாதிக்கம் முடிவுக்கு வருகிறது.

பாலஸ்தீன அதிகாரசபை ஹமாஸ் இயக்கத்தின் கைக்குவரப் போகின்றபோதிலும், யாசிர் அரபாத்தின் மறைவுக்குப் பிறகு பாலஸ்தீன ஜனாதிபதியாகத் தெரிவான மஹ்மூத் அப்பாஸ் தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போகிறார். இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்திடம் கண்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கும் பதாஹ் அமைப்பின் போராளிகள் வன்முறைகளில் இறங்கியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் ஹமாஸ் இயக்கம் எவ்வாறு செயற்படப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும். ஹமாஸைப் பொறுத்தவரை, அவ்வியக்கம் காசா பள்ளத்தாக்கிலும் மேற்கு ஆற்றங்கரையிலும் சமூக நலன்புரி அமைப்புகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மூலமாக பாலஸ்தீன மக்களுக்கு பயனுறுதியுடைய சேவையை வழங்கிய ஒரு சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. முன்னர் ஆட்சிசெய்யப்பட்ட பாணியில் இனிமேலும் தாங்கள் ஆட்சிசெய்யப்படுவதை விரும்பவில்லை என்பதை பாலஸ்தீனர்கள் தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள். அதிகாரத்துக்கு வரும் புதிய கட்சி நல்லாட்சியை வழங்குகின்ற அதேவேளை, இஸ்ரேலுடனான விவகாரங்களைக் கையாளுவதில் உறுதியுடன் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தையும் பாலஸ்தீன மக்கள் மீதான அதன் ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதில் சமரசத்துக்கு இடமில்லாத கொள்கையைக் கொண்ட - பெரும் பாலான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பான ஹமாஸ் இயக்கம் யூத அரசுடன் சமாதான சக வாழ்வைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை வெளிக்காட்டுமா? யூத அரசு மத்திய கிழக்கில் இருப்பதற்கான உரிமையை ஹமாஸ் அங்கீகரிக்குமா? பலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் காலஞ்சென்ற யாசிர் அரபாத்தும் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரே. ஆனால், பின்னர் 1988 இல் இஸ்ரேல் அரசு இருப்பதற்கான உரிமையை அவர் அங்கீகரித்ததுடன், 1990 களில் இஸ்ரேலுடன் இடைக்கால உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டார். அவ்வாறான ஒரு அடிப்படைக் கொள்கை மாற்றத்தைச் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் தயாராயிருக்குமா? அதிகாரப் பொறுப்புக்கு வருகின்ற அவ்வியக்கத்தின் அடுத்துவரும் நாட்களிலான கொள்கை நகர்வுகளே மத்திய கிழக்கின் சமாதானத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், ஹமாஸ் அதன் ஆயுதமேந்திய பிரிவை கலைக்க வேண்டுமென்றும் இஸ்ரேலை நிர்மூலஞ் செய்வதென்ற கொள்கையைக் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டிருந்தார். வன்முறைகளைக் கைவிடுவதற்கும் இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கும் மறுத்துவருகின்ற ஹமாஸ் நிலைப்பாடுகளின் காரணமாக, அவ்வியக்கத்தினால் நிருவகிக்கப்படக் கூடிய பாலஸ்தீன அதிகார சபையுடனான உறவுகளில் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென்று ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்திருக்கிறது.

காசா பள்ளத்தாக்கில் இருந்து கடந்த வருடம் வெளியேறியதைத் தொடர்ந்து மேற்கு ஆற்றங்கரையில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறினால், அந்நாட்டுடன் நீண்ட போர் நிறுத்தமொன்றுக்கு இணங்குவதற்கு தயாராயிருப்பதாகவும் ஆனால், அதன் இறுதி இலக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அதிகார சபைக்கும் பதிலாக இஸ்லாமிய அரசொன்றை ஏற்படுத்துவதே என்றும் தேர்தல் காலத்தில் ஹமாஸ் இயக்கம் நிலைப்பாட்டை விளக்கியிருந்தது. ஆயுதங்களும் ஆயுதப் போராட்டமும் ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய விவகாரங்கள். ஆக்கிரமிப்பு நீடிக்கும் வரை, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையையும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான உரிமையையும் பாலஸ்தீன மக்கள் கொண்டிருப்பர் என்று ஹமாஸ் தேர்தலுக்குப் பின்னரும் அறிவித்திருக்கிறது. ஹமாஸை தங்களது மத்திய கிழக்கு கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்புடையதான வகையில் வழிக்குக் கொண்டுவருவதற்கு பாலஸ்தீன அதிகார சபைக்கான பொருளாதார உதவிகளை ஒரு வெருட்டல் கருவியாக பயன்படுத்த மேற்குலகம் முனைந்து நிற்கிறது.

மத்திய கிழக்கில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜனநாயகத் தேர்தலொன்றின் மூலம் பாலஸ்தீன மக்கள் வெளிக்காட்டிய விருப்பத்தை எந்தவிதமாக மதிக்கப்போகின்றன அல்லது வியாக்கியானப்படுத்துகின்றன என்ற ஒரு முக்கியமான கேள்வி இன்று சர்வதேச சமூகத்திடம் விடை வேண்டி நிற்கிறது.

சூரியன்.கொம்

No comments: