Monday, January 16, 2006

யாரது சிந்திப்பது...??!

யாரது சிந்திப்பது...??!



வான்வெளி மீதினில் ஒரு பந்து
அதை வையகம் என்று கொண்டனர் மக்கள்
வழி வழி அது எங்கள் வாழிடம்
வாழ்ந்தும் போயின பல தலைமுறைகள்
இடையினில் வந்தன புரட்சிகள்
நன்மையும் தீமையும் விளைவுகளாயின..!

கரியமிலயும் காடழிப்பும்
காரிகை இதழ் பூச்சும் ஓசோன் படையழிவும்
கூட்டுச் சேர்ந்திட
வெப்பம் தாங்கிடா உருகும் பனிபோல்
கண்ணீரும் பெருகுது பல நோய்கள் கண்டு..!
நிம்மதி என்பதை பறிகொடுத்து
நிதமும் வீழ்கிறான் மனிதன் சுவடுகளாய்.!

கிண்டிக்கிண்டி பூமிப் பந்தும்
செழிப்பது இழக்குது
வளங்கள் அங்கு வறுமைக்குள் வீழ
வறுகி எடுப்பவர் வல்லரசுகள் ஆகி
வலிமை காட்டிட அழிவுக்கு ஆயுதங்கள் பெருக்குகிறார்...!
அகதியும் அலைச்சலும்
சனத்தொகை என்பதும் அபரிமிதமாக
அன்றாடம் வயிற்றுக்கு வழியின்றி
வறுமையில் வீழுது உயிர்கள்..!

அநாகரிகம் என்பது ஆட்சிப்பீடமேற
நாகரிகப் போர்வை அதுக்கு..!
சமத்துவம் என்பது இடறிய நிலையில்
நகரங்கள் எல்லாம் நரகங்களாகுது..!
புகையும் மதுவும் புன்னகைக்குது
மரணம்தனை வரவேற்க..!
வேர் விட்ட தளிர்களும் வெந்து வீழ்கின்றன
ஆழ ஊன்றிய
ஆணி வேர்களும் அறுபட்டுப் போகின்றன..!

மனங்கள் எல்லாம் அழுத்தம் தங்கிட
அமைதி என்பது இழந்து போகுது..!
ஆணும் பெண்ணும் அலைந்து விலங்குகளாய்
உணர்ச்சிக்கு அடிமையாகிட
கொடிய நோய்கள் தொற்றுக்களாகி
உடல்கள் அரிபடுகின்றன..!
சந்ததி என்பது
சரித்திரம் தொலைக்கிறது
தானும் சரிந்திட தற்கொலைக்கு வித்திடுகுது..!

யாரது சிந்துப்பது...
எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை
ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா
காலடி மிதிக்கும் பூமிப் பந்தை
காப்பது எப்படி சிந்திப்பாயா...??!
சந்திப்பாயா சவாலை..!

No comments: