Friday, December 15, 2006

இதய அஞ்சலி...



தேசம்
அதன் தோற்றமிழந்தது
நேசம்
அதன் உயிர்ப்பிழந்தது
பாசம்
அதன் கட்டிழந்தது
நெஞ்சம்
அதன் துடிப்பிழந்தது
உரிமை
அதன் ஒலியிழந்தது
விடுதலை
அதன் கீற்றிழந்தது
வீரம்
அதன் பேச்சிழந்தது
அரசியல்
அதன் ஆசான் இழந்தது
தலைவன்
தன் தோழமை இழந்தான்
தமிழினம்
அதன் தூணிழந்தது
தமிழீழம்
அதன் மகவிழந்தது
பாலா அண்ணா எனும்
போராளி
ஜீவன் இழந்ததால்.....!

Wednesday, November 22, 2006

ஆணியம்.



மாதா பிதா குரு தெய்வம்
முன்னிலை இழந்தது ஆணியம்
தாய் நாடு
தன்னிலை இழந்தது ஆணியம்
கருப்பையில்லா உடல்
உயிரின் உன்னத
இயல்பு இழந்தது ஆணியம்
தாயைப் போல சேய்
அடையாளம் இழந்தது ஆணியம்
மொத்தத்தில்...
தங்கு நிலையில்
தொங்கி வாழுது ஆணியம்.

திடம் படு தோள்
திமிரிரு ஆண்மை
வீர வசனங்கள் குறைசலின்றி..
தோளின் வலு
சுமையோ தாங்க முடியாது
திணறியே போகுது
திறனிழந்த நெம்பாக
துணையிழந்த
ஆணியம்.

பூமிதனை மிதிக்காமல்
பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ?
பூப்பாதம் என்ன
பூம் பஞ்சால் ஆனதுவோ
தசையும் எலும்பும்
45 முதல் 100 கிலோ....
பெண்ணே பெண்ணை மிதிக்கும்
கொடுமை காண மறுக்கும்
குருட்டு
ஆணியம்.

கங்கை
சரஸ்வதி
காவேரி
வற்றுதல் உயிர்க்கு இழப்பு
பூமிக்கு வறட்சி.
பெண்ணின் அன்பு
பெண்ணிய மமதையில்
மங்குதல் வற்றுதல்
மனிதர்க்கு அழிவு.
உண்மை உணராது
பேதமையில் ஊளையிடும்
கொல்லை நரிகளாய்
இன்னும்
ஆணியம்.

அறிவுப் பசிக்கு
அறிவூட்டும் அப்பாவும்
அம்மா அடிக்கையில்
இழுத்தணைக்கும் தந்தையும்
பாசமலர்களாய்
அண்ணனும் தங்கையும்
பெண்ணியப் பார்வையில்
கொடுமைகள்.
பூம் பூம் தலையாட்ட
துணை போகும்
ஆணியம்.

தன்னிலையிழந்து
துணையவளே தூண் என்று
வாழும் கணவனும்
தானே அவளென்று
தன்னவளில்
தன்னையே அர்ப்பணித்த
காதலனும்
பெண்ணியப் பாசையில்
வேஷங்கள்.
கோலங்கள் அறிந்தும்
பெண்ணியக்
கொடுமைதனை உணராத
உணர்விலிகளாய் இன்னும்
ஆணியம்.

கருவறுக்கும் செயலும்
விபச்சாரக் களவொழுக்கமும்
கற்பென்ன நெறியா
மண்ணாங்கட்டி
ஆணுக்கெங்கே கற்பு
இல்லையே என்று
போலியாய் சாதித்து,
பெண்ணின் மிருக உணர்வுகள்
வழிந்தோட வழிவிடு....
கலாசாரம் என்று
தடைகள் ஏன் அதற்கு??!
தறிகெட்டு கூத்தடிக்க
தா சுதந்திரம்...
பெண்ணியப் பாசையில்
இவையெல்லாம் விடுதலை.
விடுதடையில்
குளிர்காயக்
காத்திருக்கும் கழுகுகளாய்
கேடு கெட்ட ஆணியம்.

சமூகத்தில்
வீட்டில்
மூலைக்கு மூலை
வன்முறைகள்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அங்கே சம பங்கு.
மனிதராய்
பெண்ணுக்கும் ஆணுக்கும்
மனித உரிமைகள் சமம்.
பாவம் உணர்விருந்தும்
அறிவிழந்த பெண்ணியம்
உண்மைகள்
உணர மறுக்கிறது.
அன்பிழந்து
புரிந்துணர்விழந்து
தாண்டவக் கோலம் போடுது
துணையாக ஊழியக் கூத்து
ஆடுது ஆணியம்.


வீரியம் பேசியே
வீணடிக்கும் காலம்
வீணாப் போகுது வாழ்க்கை
தொலைத்ததை எண்ணி
கலங்காத ஆணியம்
பெண்ணியம் என்ற
மமதைக்கு மகுடி ஊதுது.
சீறிப்பாயும் நச்சுப் பாம்பை
அடக்க நினைக்கும்
அற்ப சிந்தனை.

ஆணிற்கு ஆதிக்கம்
பெண்ணிற்கு அடிமைத்தனம்
இது காலத்தால் புனைந்த
அழகிய புனை கதை.
உயிர்க்குள் எங்கே
ஆண் என்றும் பெண்ணென்றும்
வேற்றுமை
உடலால் மட்டும் சில மாற்றங்கள்
கண்டுணர்ந்து புரிந்து கொள்வீர்.
உரிமைகள் மதித்து
உணர்வுகள் புரிந்து
வாழப் பழகுவீர்.
ஒழுக்கமும் நீதியும்
உயிர்க்கு இரு நாடிகள்.
நாடிகள் தானிழந்து
மனிதராய் வாழுதல் முடியுமோ??!
அன்பைத் தொலைத்து
ஒரு மனிதமா?
பெண்ணியமே ஆணியமே
தமிழகராதி கொண்டிராத
அற்ப பதங்களே
சிந்திக்க..ஓர் கணம்...!

போராளிகள் - வன்னித்தென்றல்

போராளிகள்



"விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்" என்ற வார்த்தைகள் மட்டும் சங்கரின் காதில் எதிரொலித்தபடி இருந்தது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்ட அந்தச் சம்பவம் மட்டுமே அவனின் நினைவுகளில் தற்போது ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது.

சங்கர் பிறந்தது மட்டக்களப்பில் ஒரு சின்னக் கரையோரக் கிராமத்தில். அக்கிராம மக்களின் பிரதான தொழிலே மீன் பிடிதான். தாய் பார்வதியும் தகப்பன் ஜோசப்பும் பல காலம் குழந்தைகளின்றி இறுதியில் சங்கரைப் பெற்றெடுத்தனர்.

மீன்பிடித்தொழிலில் செய்வோர் பலரிடம் வறுமை என்பதும் ஒட்டிப்பிறந்த ஒன்றுதானே. பார்வதி யோசப் குடும்பமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

தினமும் கட்டுமரத்தோடு மட்டு வாவியில் இறங்கி கரை சேரும் போது கொண்டு வரும் கடலுணவோடுதான் அவர்களின் ஜீவனமே. பரம்பரை வீடொன்று பார்வதிக்கு சீதனமாகக் கிடைத்திருந்ததால் அதுதான் முழுக் குடும்பத்துக்கும் நிழலாகி நின்றது இறுதிவரை.எத்தனை கடன்படினும் வீட்டையும் அதனுடன் கூடிய நிலத்தையும் அவர்கள் காப்பாற்றத் தவறவே இல்லை.

வழக்கம் போல அன்றும் விடியலின் வேளைக்காக அக்கிராமம் காத்திருந்தது. அமைதியான இரவின் நிசப்தத்தை காக்கைகளின் கரைதலும் குருவிகளின் கீச்சிடுதலும் குழப்பிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நத்தார் விடியல் என்பதால் ஜோசப் அன்று தொழிலுக்கு செல்லவில்லை.

நத்தார் என்பதால் ஜோசப் வழமையை விட கொஞ்சம் நேரத்துடனேயே கண் விழித்துக் கொண்டார். படுக்கையில் விழித்தபடி எழும்புற பஞ்சியியில் இருந்த அவரால் அன்று வழமைக்கு மாறாக இயந்திரப்படகுகளின் ஓசையைக் கேட்க முடிந்தது. "விடியத் தானே போகுது.. கரை போய்... என்ன பிரச்சனையோ தெரியல்ல பார்ப்பம்..போட் சத்தமா இருக்குது" என்று உறங்கிக் கொண்டிருந்த மனைவி பார்வதியையும் சிறுவன் சங்கரையும் குழப்பாமல் வீட்டை விட்டு மெதுவாக வெளியேறி வாவிக்கரை நோக்கி... புதினம் பார்ப்பதற்காக நடக்கலானார். வாவிக் கரையை அடைந்தவருக்கு திகைப்புக் காத்திருந்தது.

சங்கர் குடும்பம் வாழ்ந்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கும் பொடியங்களின் கட்டுப்பாட்டுக்கும் இடைப்பட்ட பகுதி. இரவோடு இரவாக பொடியங்களின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகர்வதற்காக நேவியும் ஆமியும் அங்கு நகர்ந்திருப்பது அறியாமல் ஜோசப் வாவிக் கரையை அடைந்ததும் தரையோடு தரையாக நிலையெடுத்திருந்த ஆமிக்காரங்கள்.."டோ.. மே எண்ட..ஒயா எல் ரி ரி ஈ த (டேய் இங்க வா..நீ புலியா)" ..என்று கத்திய படி அவரைச் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்த போதே அவர் தான் ஆமியிடம் சிக்கி சிக்கலில் மாட்டிவிட்டத்தை உணர முடிந்தது.

"ஐயா எனக்கு சிங்கள தன்னா (ஐயா எனக்கு சிங்களம் தெரியாது).. இங்க தான் என்ர கட்டுமரம் விட்டனான் பார்க்க வந்தன் " என்று அவர் ஆமிக்காரங்களை நோக்கி தனக்குத் தெரிந்த சிங்களத்தைக் கலந்து தமிழில் பதில் சொன்னார். அதற்கு அவர்கள்... "ஒவ் ஒவ் ஒயா தெமிழ கெட்டி நெய்த... எல் ரி ரி ஈ சப்போட்..மே தங் அப்பி எல் ரி ரி ஈ கென்றோல் ஏரியாட்ட யன்டோன..அப்பிட்ட உதவுக் கரண்ட புளுவந்த?" ( ஓம் ஓம் நீங்கள் தமிழ் என்ன..புலிக்கு சப்போட். நாங்க இப்ப புலிட பிரதேசத்துக்கு போக வேணும்..உதவுவிங்களா?) என்று அச்சுறுத்தும் பாணியில் கேட்டனர். இதை விளங்கிக் கொண்ட ஜோசப்.."எனக்கு எல் ரி ரி ஈ எங்க இருக்கு என்று தெரியா" என்று தமிழில் சொன்னார். அதற்கு அவர்கள் புலிகளால் காயப்பட்ட எங்களுக்கு உதவில்லை என்றால் உன்னைச் சுட்டுவிடுவோம் என்றனர்.

தான் மீள முடியாத ஆபத்தில் சிக்கிக் கொண்டதை உணர்ந்த ஜோசப் ஓடித் தப்பிக்கவும் சந்தர்ப்பம் இல்லாததால் தன் குடும்பத்தை நினைத்துப் பார்த்தார். தன்னையே நம்பி வாழும் மனைவி பார்வதி... சின்னப்பிள்ளையான சங்கர் என்று அவர்களின் நிலையையும் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்த்து விட்டு.."இவங்களுக்கு உதவப் போனாலும் ஊருக்கு கஸ்டம் ஆகிடும்... எனக்கும் பிரச்சனை தான் மிஞ்சும்..தொடர்ந்து தங்களோட இருக்கச் சொல்லி மனிதக் கேடயமாகக் கூட்டிக் கொண்டு போவாங்கள்" என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் துப்பாக்கிகள் முழங்க ஆரம்பித்தன. ஜோசப் நின்ற பகுதியை நோக்கி சன்னங்கள் கூவிக் கொண்டு வந்தன. "பொடியள் சுடத்தொடங்கிட்டாங்கள்... என்ன நடக்கப் போகுதோ" என்று யோசிப்பதற்கிடையில் அவரை நோக்கி நீண்ட ஆமிக்காரனின் துப்பாக்கி கக்கிய ரவைகள் அவரின் உடலைப் பதம் பார்க்க..உயிரற்ற உடலாக ஜோசப் சொந்த மண்ணில் குருதி பொங்கி வழிய வீழ்ந்தார்.

அவர் வீழ்ந்த பின்னும் துப்பாக்கிச் சண்டை விடாமல் தொடர்ந்தது. அது உக்கிரமடையத் தொடங்க நேவி தன் பங்குங்கு "கன்போட்" கொண்டு தாக்க ஆரம்பித்தான். நேவி ஏவிய குண்டுகள் கரையோரக் கிராமங்கள் எங்கும் விழுந்து வெடிக்கத் தொடங்கின. துப்பாக்கிச் சத்தங்களையும் குண்டுச் சத்தங்களையும் கேட்ட ஜோசப்பின் மனைவி பார்வதி கண் விழித்துக் கொண்டதோடு..பதட்டத்தில்.. கணவன் இன்னும் வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு.. "என்னங்க எழும்புங்க ஆமி அடிக்கிறான் போலக்கிடக்கு" என்று தூக்கம் கலைந்தும் கலையாததுமான நிலையில்.. பதறி அடித்துக் கொண்டு சங்கரையும் அவசர அவசரமாக தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். அப்போது நேவி ஏவிய குண்டோன்று அவர்கள் வீட்டருகில் வீழ்ந்து வெடிக்க தலையில் காயப்பட்ட பார்வதி கையில் தாங்கிய சிறுவன் சங்கருடன் மண்ணில் சாய்ந்தார்.

சிறிது நேர அகோரச் சண்டையின் பின்னர் நேவியும் ஆமியும் தங்கள் நோக்கம் நிறைவேறாமல் பின் வாங்கிச் சென்றனர். மீட்புப் பணிக்காக வந்த போராளிகள் கரையோரத்தில் உயிரற்றுக் கிடந்த ஜோசப்பின் உடலையும் வீட்டருகில் உயிரிழந்து கிடந்த பார்வதியின் உடலையும் இன்னும் பல இறந்த பொது மக்களின் உடல்களையும் சேகரித்து மோசமாகக் காயப்பட்ட பொதுமக்களையும் பொறுக்கி எடுத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாயின் உயிரற்ற உடலருகே கையில் சிறுகாயங்களோடு அழுது கொண்டிருந்த சங்கரையும் போராளிகள் மீட்டு... முதலுதவி அளித்து... சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறுவர் காப்பகத்தில் வளர்ந்த சங்கருக்கு மற்றைய பிள்ளைகளைப் போலவே தாய் தந்தையரப் பிரிந்த சோகம் மனதில் இருந்தாலும் அது வெளிப்படாத வகையில் கவனிப்பு இருந்தது. அவனும் சோகங்கள் மறந்து தனிமை மறந்து பள்ளி சென்று வந்தான். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அவன் போராளிகளின் பயிற்சிப் பாசறையில் இணைய விரும்பி பயிற்சியும் பெற்றுக் கொண்டான்.

பயிற்சியின் போது தனது முழுத்திறமைகளையும் வெளிக்காட்டி பயிற்சியாளர்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டான். அவனிடமிருந்த அரசியல் தெளிவை கண்டு கொண்ட போராளித் தலைவர்கள் அவனை மட்டக்களப்பில் சிறிது காலம் அரசியல் பணியாற்ற நியமித்தனர். சுமார் ஆறு மாத காலங்கள் தனது அரசியல் பணியைச் செய்த சங்கர் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

யாழ்ப்பாணத்தில் யாழ் நகரில் தான் அவன் தங்கி இருந்த முகாம் அமைந்திருந்தது. அந்த முகாமருகே ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு ஒரு மூதாட்டி கணவனை இழந்த நிலையில் தனது பிள்ளைகள் மூவரையும் கனடா ஐரோப்பா என்று வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தார். சங்கர் தினமும் காலையில் உடற்பயிற்சி முடித்து பத்திரிகையோடு முகாம் வாசலில் நிற்கும் போதெல்லாம் அந்த மூதாட்டியைக் காண்பது வழக்கம். அவரும் சங்கரிடம் ஊர்ப்புதினங்கள் கேட்பார். அது மட்டுமன்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது சொந்தப் பிரச்சனைகளை எல்லாம் சொல்லி ஆறுதல்படுவார். சங்கரும் அவரோடு தனது சொந்தக் கதைகள் பேசுவான். அதனால் இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வும் பேரன் பேத்தி பாச நிலையும் உருவானது. சங்கர் மேலெழுந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் சக போராளிகள் மீதும் அந்த மூதாட்டி நல்ல மரியாதைகளைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலையில் தோசையும் சுட்டு சம்பலும் அரைத்துக் கொண்டு போராளிகளுக்குக் கொடுப்பதற்காக முகாம் வாசலில் காத்திருந்த மூதாட்டியை போராளி ஒருவர் கண்டு.. "என்னம்மா..கன நேரமா காத்திருக்கிறீங்கள் போல..சங்கர் அண்ணாவையா பார்க்க விரும்புறீங்கள்?"

"ஓம் மகன் சங்கரை மட்டுமில்ல உங்களை எல்லாம் தான் பார்த்து இந்தச் சாப்பாட்டைக் கொடுப்பம் என்று வந்தன்" என்று கூறி பாசலை நீட்டினார்.

அதற்கு அந்தப் போராளி "அம்மா சங்கர் அண்ணாவும் இங்க இருந்த இன்னும் 15 போராளிகளுமா ஆனையிறவுப் பக்கம் சண்டைக்குப் போயிட்டினம். அங்க இருந்து ஆமி யாழ்ப்பாண நகரை நோக்கி வர முயலுறான்... அதைத் தடுத்து நிறுத்திற சண்டையில பங்கெடுக்கப் போயிட்டினம் " என்று கூறி சாப்பாட்டுப் பாசலை வாங்கவே மனசிமில்லாமல் முகத்தில் வாட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.

இதை அவதானித்த மூதாட்டி.."அப்படியே மகன்.. அப்ப நான் சங்கரும் அந்தப் போராளிப் பிள்ளையளும் திரும்பி வந்த பிறகு வாறன் என்ன... அவை வந்த உடன ஒரு குரல் கொடுத்துச் சொல்லு மகன்" என்று கூறிவிட்டு கொண்டு வந்த பாசலோடு வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மனசுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு.. "நானும் இரண்டு பொடியளைப் பெற்றனான்.. ஒரு பொம்பிளைப் பிள்ளை பெற்றனான். அதுகள் பிரச்சனை என்று கண்ட உடன நாட்டை விட்டு ஓடத்தான் நின்றதுகளே தவிர... நாட்டைக் காக்க வேணும் என்று நினைக்கல்ல"...." இந்தப் பிள்ளையள் எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்து இத்தனை துன்பங்களையும் சுமந்து கொண்டு இப்ப போராளிகளா தங்கட நாட்டைக் காக்கப் போராடுதுகள்"....."ஆனால் என்ரையள்.. அதுவும் என்ர கடைசி ரமணன்... கனடாவில வெள்ளைக்காரியைக் கட்டிக்கொண்டு என்னையே மறந்திட்டான்....எல்லாம் நானும் என்ர மனிசனும் கஸ்டப்பட்டு அவைக்கு கஸ்ரம் என்றால் என்னென்று தெரியாம வளர்த்தால வந்தது.....தாய் நாட்டு மேல பற்று இல்லாம சொகுசைக் காட்டி வளர்த்திட்டம். அதால அதுகளுக்கு தாய் நாட்டு மேலவும் பற்றில்ல தாய் மேலயும் பற்றில்லாமல் போச்சு.... வெறும் உலக டாம்பீகமே வாழ்க்கையாப் போச்சு"

"அதுகளைப் பொறுத்தவரை வாழ ஒரு இடமிருந்தாப் போதும். அது எங்க இருந்தாலும் சரி. வசதிகளும் வாய்ப்பும் உள்ள இடத்தை நோக்கி ஓட நினைக்குதுகளே தவிர அதை ஏன் தன்ர தாய் மண்ணில உருவாக்கப் பாடுபட நினைக்குதுகள் இல்லையோ தெரியாது"

"இதாலதான் நான் சொல்லிப்போட்டன் எனக்கு கனடாவும் வேண்டாம் ஐரோப்பாவும் வேண்டாம் என்று... என்ர அம்மா. அப்பா காலத்தில வெள்ளைக்காரன் இங்க இருந்தவன். அவனுக்கு இங்க செல்வம் இருந்தது. இருந்தாலும் அவன் இந்த நாடுகளை தன்ர நாடென்று சொந்தம் கொண்டாட முயல்ல. செல்வங்களை மீட்டு தன்ர நாட்டுக்கு அனுப்பினான். ஆனால் எங்கட பிள்ளையள் சொந்த நாட்டை விட்டிட்டு அந்நிய நாட்டில சொந்தம் கொண்டாட நினைக்குதுகள். ஒரு கனம் சிந்திச்சுதுகளா.. நாங்கள் ஆமி வர ஓடுறமே ஏன் ஆமி இங்க வாறதில அக்கறையா இருக்கிறான் என்று.. தவிர அவன் ஏன் வெளிநாட்டுக்கு ஒட நினைக்கல்ல என்று. எங்கட பிள்ளையளுக்கு சுயநலத்தை ஊட்டி வளர்த்திட்டம். எனி என்ன செய்யுறது.."

"பாவம் இந்தப் பிள்ளையள். இந்த வெய்யிலுக்க அந்த வெளிக்க என்ன கஸ்டப்படுகுதுகளோ...நல்லூருக் கந்தா.. இந்தப் பிள்ளையளுக்கு ஒரு ஆபத்தும் இல்லாமல் பத்திரமா வெற்றியோட திருப்பி அனுப்பி வை போர்க்களத்தில இருந்து" என்று கடவுளை வணங்கி தன்னை தானே தேற்றி தன் மனசுக் குமுறலையும் கொட்டி.... உணர்ந்த குற்றவுணர்வையும் அகற்ற முனைந்து கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.

பொழுதும் இரவானது. இரவு 11 மணி இருக்கும். வாகனங்கள் வந்து போராளிகளின் முகாம் வாசலில் நிற்கும் சத்தம் கேட்டு லாம்பையும் கொண்டு கேற் வாசலுக்கு வந்தார் மூதாட்டி. போராளிகள் அவசர அவசரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போ மூதாட்டியைக் கண்டுவிட்ட சங்கர்.."என்ன நீங்கள் இன்னும் நித்திரைக்குப் போகல்லையா அம்மா...?" என்று பாசத்தோடு கேட்டான்.

"இல்ல மகன்..நீங்கள் எல்லாம் சண்டைக்குப் போயிட்டியள் என்று ஒரு பிள்ளை சொன்னான். அதற்குப் பிறகு மனசெல்லாம் ஒரே யோசனை. என்ர செல்வங்களுக்கு என்ன கஸ்டமோ என்று. நீங்கள் எல்லாம் பத்திரமா வந்திட்டிங்களே ராசா. நான் நல்லூரானைக் கும்பிட்டுக் கொண்டே இருந்தனப்பு."

இதைக் கேட்ட சங்கர்...

ஐயோ அம்மா. எங்களுக்கு ஒன்றுமில்ல. நாங்கள் ஆமியை அடிச்சுக் கலைச்சிட்டு வந்திருக்கிறம். நீங்கள் போய் கவலைப்படாம சந்தோசமாப் படுங்கோ".

"இல்ல மகன்.. நீங்கள் எல்லாம் களைச்சுப் போயிருக்கிறீங்கள். கொறிலிக்ஸ் கரைச்சுக் கொண்டு வாறன் என்ன?" என்று உள்ளே சென்ற மூதாட்டி...முகாமில் சோக கீதம் இசைப்பதைக் கேட்டு பதறிப் போனார்.

கேற்றடிக்கு ஓட்டமும் நடையுமாய் வந்த மூதாட்டி.."தம்பி சங்கர் நிக்கிறானே. அவன் எனக்குப் பொய் சொல்லிப் போட்டான். ஏன் சோக கீதம் போடுறீங்கள்" என்று கேட்டார் வாசலில் நின்ற போராளிகளை நோக்கி.

"ஓம் அம்மா நாங்கள் உங்களுக்குச் சொல்லேல்ல. நீங்கள் மனசு கஸ்டப்படுவீங்கள் என்று. இங்க இருந்து போனதில எங்கட தம்பி ஒருவன் விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்து மாவீரர் ஆகிட்டார். அவர் எப்பவும் சொல்லுவார்..."நான் இந்த மண்ணின் தமிழிச்சியின் வயிற்றில் உருவாகினனான்..நான் இந்த மண்ணின் சொத்து...வீழ்ந்தாலும்... என் தாய் மண்ணில வித்தாகத்தான் விழுவன். என் வீரச்சாவில யாரும் அழக் கூடாது. என் வீரச்சாவில.. நான் நேசிக்கிற மக்கள் தங்கட சொந்த மண்ணில் ஒரு இரவைத்தானும் எதிரியின்ர கரைச்சல் இல்லாமல் நிம்மதியா கழிப்பினம் என்றால் அதுதான் எனக்கு செய்யுற மரியாதையா நான் பார்ப்பன்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதுக்கு மரியாதை அளிச்சும் உங்கட மனசு கஸ்டப்படக் கூடாதென்றும் தானம்மா சங்கர் அண்ணா சொல்லேல்ல." அவருடைய வித்துடல் இன்னும் வரேல்ல. விடியத்தான் வருமம்மா. நீங்கள் போய் இப்ப தூங்குங்கோ விடிய வந்து அஞ்சலி செய்யலாம்"

"இல்ல மக்கள்..எனக்கு தூக்கமே வரேல்ல. என்ர பிள்ளையைப் பறிகொடுத்தது போல இருக்கு. உங்களுக்குத் தெரியாது பிள்ளையள். நான் ஒவ்வொரு நாளும் நீங்கள் அணிவகுத்துப் போகேக்க உங்கள் முகங்களைப் பார்ப்பன். அதில எத்தினை சோகங்களுக்கும் மத்தியில புன்னகை இருக்கும். போராளி ஆகிறது என்பது சாதாரண ஆடம்பர வாழ்க்கைக்குள்ள வாழுறவையால முடியாத சங்கதி மக்கள். அதுக்கு தியாக உணர்வும் தன்னையே நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கிற மனமும் வேணும். உங்களை எல்லாம் இந்த 71 வயதிலும் நான் மனசில பதிச்சு வைச்சிருக்கிறன். நான் சாகும் போது கூட என்ர சொந்தப் பிள்ளையள நினைக்க மாட்டன். அதுகள் சொந்த தாய் மேல தாய் நாட்டு மேல அக்கறையில்லாத ஆடம்பர வாழ்க்கையை நேசிக்கிற உடல் சுகபோகிகளா மாறிட்டுதுகள். ஆனால் உங்கள எப்பவும் நினைப்பன் மக்கள்.."

இப்படி அந்த மூதாட்டி பேசிக் கொண்டிருக்கும் போது வாசலுக்கு வந்த சங்கர்.."அம்மா என்ன ஆச்சு உங்களுக்கு... கவலைப்படாதேங்கோ. நீங்கள் எல்லாம் சந்தோசமா வாழ வேணும் என்றுதான் நாங்கள் வீழுறம் மண்ணில. உங்கட பிள்ளைகளும் அவைட சந்ததியும் இந்த மண்ணிற்கு வந்து வாழ விரும்ப வேணும். அதற்கான சூழலை எங்கட தாய் மண்ணில உருவாக்கத்தான் நாங்கள் தலைவர் வழியில நிற்கிறம். எங்கள் மரணத்தில் சோகம் இருக்கலாம். ஆனால் கண்ணீர் எழக் கூடாது. காரணம் நாங்கள் வித்தாகத்தான் வீழுறம். மீண்டும் எழுவம் நினைவுகளாக. அது இந்த மண்ணில சுதந்திரக்காற்று வீசும் போது தான் எங்கள் மகிழ்ச்சிக்குரிய முறையில நடக்கும். நாங்கள் வீழ்ந்தாலும் நீங்களும் உங்களைப் போன்ற தாய்மாரும் தந்தைமாரும் தான் எங்கள் சந்தோசங்களைப் பெற்றுத் தர உறுதி வழங்க முடியும். நாளைக்கு அம்மா... எங்கள் உடல் எந்த களத்தில சிதறிச் சின்னாபின்னமாகுமோ தெரியாது. ஆனால் அந்தத் தசைத் துண்டுகள் ஒவ்வொன்றும் வித்தாக முளைக்க வேண்டும். நாங்கள் சுமக்கிற கனவுகளை நிறைவேற்றி வைக்க அணி அணியா புதியவர்கள் வர வேண்டும். தாய் மண்ணை மனித வேலி அமைச்சு காத்து நிற்க வேணும். அதுதான் நீங்களும் மக்களும் எமக்குச் செய்யுற அஞ்சலியம்மா."

இதைச் சங்கர் சொல்ல விழிகளின் நீர் கசிய பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மூதாட்டி...

"நிச்சயமா மகன் நான் உயிரோட இருந்தால் அப்படித்தான் செய்வன். நாளைல இருந்து நானும் சண்டைக்களத்திற்கு வந்து ஏதாவது என்னால முடிந்த உதவி செய்யுறன். ஒருவேளை தேத்தண்ணி வைச்சுத் தந்தால் கூட அதுதானப்பு எனக்கு எனி மன ஆறுதல். "

சரியம்மா உங்களை நாளைக்கு கூட்டிக் கொண்டு போறன் ஆனையிறவுக்கு. இப்ப போய் படுங்கோ. என்று ஆறுதல் சொல்லி அந்த மூதாட்டியின் கையைப் பிடித்த சங்கர் அவரை மெதுவாக நடத்தி வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போது...

"இன்றைக்கு பெரிய சண்டையே மகன் நடந்தது.."

"ஓம் அம்மா சரியான சண்டை. 80க்கும் மேல ஆமி இறந்திருப்பாங்கள். வாகனங்களையும் விட்டிட்டு ஓடிட்டாங்கள். அவங்களும் ஆரம்பத்தில சளைக்காமல் சண்டை பிடிச்சாங்கள். நாங்கள் உக்கிரமா அடிச்சாப் பிறகுதான் பின்வாங்கினாங்கள். அவங்கள் சம்பளத்துக்கு அடிபடுறாங்கள் என்று மட்டும் நினைக்கக் கூடாது. அவங்களும் வந்திட்டம் தங்கட உயிரைப் பாதுகாக்க வேணும் என்று சண்டை பிடிக்கத்தான் செய்யுறாங்கள்."

"அப்படியா மகன். அப்ப அவங்களுக்கு இழப்பு என்றால் இங்கால பொம்பரால வந்து அடிப்பாங்களே. எதுக்கும் உந்தக் காம்பில உள்ள "விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்". வீணா ஆபத்துக்களை வரவழைச்சு அநியாய உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்பட்டா என் போன்ற உங்களைப் பிள்ளையலா நினைக்கிற, சகோதரங்களா நினைக்கிற மக்களின்ர மனசு தாங்காது. எங்கட தமிழீழத் தாய் நாட்டைப் பாதுகாக்கிற விலை மதிக்க முடியாத செல்வங்கள் நீங்கள். உங்கள் மத்தியில அநாவசிய இழப்புக்களைத் தவிர்க்க வேணும் மகன்."

"ஓம் அம்மா..நிச்சயம் உங்களைப் போலத்தான் நானும் பல போராளிகளும் நினைக்கிறம். நன்றி அம்மா. எங்களோட பழகின குறுகிய காலத்துக்குள்ளேயே எங்களோட ஒரு போராளியா நீங்கள் உங்களை உணர்வால இணைச்சு வைச்சிருக்கிறதை நினைக்கேக்க மகிழ்ச்சியா இருக்கம்மா. உங்களைப் போலவே எல்லா தமிழ் மக்களும் போராளிகளோடு போராளிகளாயிட்டா இன்று விழுந்தானே தம்பி அவன் போன்ற மாவீரர்களின் கனவுகள் வெகுவிரைவில நனவாகிடும் அம்மா.

சரி அம்மா.. எனிப் போய் படுங்கோ..கவலைப்படாமல். விடிய வந்து அந்த மாவீரனுக்கு அஞ்சலி செய்யுங்கோ என்ன..." என்று அந்த மூதாட்டியை வீட்டின் விறாந்தையில் விட்டுவிட்டு வந்தான் சங்கர்.

பொழுதும் விரைவே விடிந்தது. சோக கீதங்கள் இசைக்க.. மாவீரனின் வித்துடல் முகாமில் அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்டது. போராளிகள் பொதுமக்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட தாயக்கபற்றோடு தாய் மண்ணில் வாழும் மக்கள் கலந்து கொண்ட இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் முடிந்து. அந்த முகாமில் இருந்த போராளிகளின் செல்லத் தம்பியான "தம்பியின்" வித்துடல் மாவீரர் துயிலும் இல்லம் நோக்கிப் புறப்பட இருந்த சமயம்..சங்கர் சக போராளியான தமிழவனைப் பார்த்துக் கேட்டான்.."தமிழ் எங்கட முன் வீட்டு அம்மாவைக் கண்டனியே இன்றைக்கு?"
"இல்லை சங்கர்..விடிஞ்சாப் பிறகு...அம்மாவை இப்ப வரைக்கும் கண்ட சிலமனில்ல. பாவம் இரவு நள்ளிரவு தாண்டியும் இங்க தானே நின்றவா..எங்க போயிருப்பா..?"

"அப்படியா அப்ப சரி. நேற்று இவன் தம்பியின் இழப்பைக் கேட்டு சோகமா இருந்தவா. அந்த அம்மா சரியா கவலைப்பட்டு உணர்ச்சி வசப்பட்டும் பேசினவா. ஒருக்கா அவாட வீட்டில போய் பார்த்துக் கொண்டு வாறன் என்ன நடந்ததென்று."

வீட்டுக்குள் சென்று பார்த்த சங்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மூதாட்டி சோகத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமலே விறாந்தையில் இருந்த சாய்மனைக் கதிரையில் நித்திரையோடு தன் உயிரையும் சோக நினைவுகளுக்குப் பரிசளித்து உயிர்திறந்திருந்தார்.
இதைக் கண்ட சங்கர் ஒரு போராளிக்குரிய முறையில்... பதறாமல்..மனதோடு சோகம் சூழ..ஒரு தெளிவுக்கு வந்தான்.

எங்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டிய இந்த அம்மாவும் போராளி தான். " பொம்பர் வரும் விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்" என்று எவ்வளவு அக்கறையோடு பாசத்தைக் காட்டிய ஒரு தமிழீழத் தாய் இந்த அம்மா. நிச்சயம் இந்த அம்மாவுக்கு போராளிக்குரிய மரியாதையை தேசம் வழங்க வேணும். தமிழீழத் தேசத்துத் தாய்மார்களில் இந்த அம்மாவுக்கும் ஒரு தனி இடம் அளிக்க வேணும் என்று அவருக்கு அந்த நிமிடத்திலேயே இறுதி வணக்கம் செய்து உறுதியும் பூண்டான் சங்கர். அதன்படி அவருக்கு ஒரு போராளிக்குரிய மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளையும் செய்து முடித்தனர் போராளிகள்.

மீண்டும்.. முகாம் வாசலில் நின்றபடி காட்டிய அன்பால் பாசத்தால் புரிந்துணர்வால் போராளி ஆகிவிட்ட முன் வீட்டு மூதாட்டியின் நினைவுகளோடு...சங்கர்

"இப்படி எத்தனை தாய்மார் தங்கள் பிள்ளைகளையும் தங்களையும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். விதைகளாக புனித விதைகுழிகளில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் தியாகங்கள்..போர்க்களத்தில் உடல் சிதைந்து போன போராளிகளின் தியாகங்கள் என்று எத்தனை தியாகங்கள் அவை ஒவ்வொன்றும் எத்துணை பெறுமதி வாய்ந்தவை. மக்கள் அவர்கள் எங்கு வாழினிலும் தமிழீழத் தமிழர்கள் என்ற வகையில் தங்கள் நினைவெனும் பூங்காவில் இவர்களை பூஜிப்பது மட்டுமன்றி அவர்களின் கனவுகளை நனவாக்க அவர்களின் பாதங்கள் நடந்த பாதையில் பயணிக்கவும் தயாராக வேண்டும். நாளை என்றல்ல இன்றே இந்த மாவீரர் நினைவுகளோடு அது நடக்க வேண்டும். அப்போதுதான் தம்பி போன்ற மாவீரர்களினதும் இந்த மூதாட்டி போன்ற தாய்மாரினதும் இன்னும் பிள்ளைகளைத் தேசத்துக்கு அர்ப்பணித்த தாய்மார்களினதும் எண்ணம் சாந்தி பெறும்...தமிழீழ விடுதலையும் துரிதப்படுத்தப்படும்" என்று தனக்குள் மீண்டும் மீண்டும் உறுதியாக எண்ணிக் கொண்டான்.

தேசப்பிரியன்- நன்றி வன்னித்தென்றல்

கதையின் மூலம் இங்கு

Saturday, November 18, 2006

வீர தீபம்



தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.

Monday, September 18, 2006

திலீபன் அழைப்பது சாவையா..இந்தச் சின்ன வயதில் அது தேவையா..



தியாக தீபமே
விடுதலைத் தீயே....
அன்னை மடியில்
நீ நடந்த தடங்கள் அழியவில்லை..!
அன்னை மண்ணில்
நீ பதித்த போராட்டச் சுவடுகள்
கருவறைகளாகி
சாதனைகளாய் பிரசவிக்கின்றன...!

நீ சுமந்த விடுதலைக் கனவு
நனவாகும் நாள் தொலைவில் இல்லை..
நீ நேசித்த தலைவன் வழி
மக்கள் நடத்தும்
களம் சொல்லுது கதை...!

நாளைய உலகில்
உன் உயிரினும் மேலாம் மக்கள்
உன் நினைவோடு
விடுதலை கொண்ட சுதந்திர புருசராய்.....
நீயே காண்பாய் விண்ணிருந்து....!

உன் ஆன்மக் கனவு ஈடேறும்
இப்போ
தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு...!
என்றும் எம் அவதார புருசனாய்
நீயும் வாழ்வாய்
தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு...!


ஆக்கம் குருவிகள் - 11-09-2004

Friday, September 08, 2006

பெண்களுக்கு மட்டும் ஏன் ஒரு பக்கம்..?!

ஆணும் பெண்ணும்..மனிதர்கள். மனித நாகரிகத்துக்கு உட்பட்டு..மனிதாபிமான எல்லைகளுக்குள்ள நின்று..ஆணும் சரி பெண்ணும் சரி தங்களுக்குரிய உரிமைகளை சமத்துவமாக அனுபவிக்கக் கூடிய திறன் உண்டு.

இருந்தும் இன்னும் பெண்களுக்கு என்று சில பிரத்தியேக சலுகைகளும்...வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றனவே.

உதாரணத்துக்கு...செக்ஸுவல் டிஸ்கிறிமினேசன் என்றால் பொதுவாக எல்லோர் மனங்களிலும் பெண் பாதிக்கப்பட்டுவிட்டாள் அல்லது பாதிக்கப்படுகிறாள் என்றுதான் நோக்கப்படும். அதில் ஓரளவு உண்மை இருக்கு என்றாலும்..அது முற்றிலுமான உண்மையல்ல..! இன்று பெண்களால் கூட ஆண்கள் தொந்தரவு செய்யப்படினம். வேலை செய்யும் இடங்களில் ஒரு ஆண் தற்செயலாக சிக்கிவிட்டால்...அவனை கேலிப் பேச்சுக்களால்..நோகடிப்பது முதல்..பலதையும் பெண்கள் செய்யினம். இதையே ஆண்கள் செய்துவிட்டால் அது பாராதூரமாக நோக்கப்படும். ரோச்சர்.. ஈவ்ரீசிங் என்றெல்லாம் பெயரிடப்படும்..! இதையெல்லாம் முறையிட இடமிருக்கும்..ஆனால்..ஆண்களுக்கு...??!

ஆண் என்பதற்காக சில வேலை வழங்குனர்கள் வேலை தரப் பின்னடிக்கும் நிலையும் இன்று எழுந்துள்ளது..! பெண்கள் தான் இந்த வேலைக்கு பொருத்தம் என்று அவர்கள் மனதளவில் தீர்மானித்து விட்டு பெண்களைத்தான் அமர்த்துகின்றனர்..! விமான பயண பதிவு மற்றும் ஒழுங்குகளைச் செய்யும் இடங்களில் பாருங்கள்..பெண்களைத்தான் அமர்த்தி இருக்கிறார்கள்..! இப்படியான இடங்களில் ஆண்களை விரல்விட்டு எண்ணலாம். வேலை கேட்டால் கூட நாங்கள் பெண்களைத்தான் பெரிதும் விரும்புறம் என்றீனம்..! (வி பிறிபர் லேடிஸ் ஸ்ராவ்)

அதுபோக.. பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எல்லாம் இப்போதும் பெண்களுக்கு என்று அவர்களின் பிரச்சனைகளை..குசும்புகளைச் சொல்ல பக்கம் இருக்குது. ஆண்கள் பிரச்சனைகளை புறக்கணிக்கப்படுகின்றன..அல்லது பொத்தாம் பொதுவா பேசப்பட்டு பலதோடு சிலதா மறைந்து போய் விடுகின்றன...! அவர்களுக்கு என்றும் ஒரு தனிப்பக்கத்தை உருவாக்க வேணும். அப்பதான் சமூகத்தில் உள்ள ஆண்களின் பிரச்சனைகளும்..தூலாம்பரமாக ஒரு பக்கத்தை அலங்கரிக்க..பெண்களால் ஆண்கள் படும் துன்பங்களும்..அவற்றைப் பெண்கள் கண்டுணர்ந்து தவிர்க்கவும் வழிபிறக்கும்..!

புரட்சி என்று பெண்களுக்காக பலமாற்றங்கள் வந்துள்ள நிலையிலும்..ஆண்களுக்கு என்று அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழி செய்யப்படவில்லை. இதனால் பல ஆண்கள் நொந்து நூலாகிப் போகின்றனர். வீட்டிலும் சரி வெளியிலும் சரி..!

உலகெங்கும் ஆண்களின் கல்வி வளர்ச்சி..பரீட்சையில் சித்தி பெறும் வீதம் தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்கிறது. பெண்களை விட பல சத வீதங்கள் குறைவடைந்திருக்கிறது. இது குறித்து எவரும் கவலைப்பட்டதுண்டா..???! இதே பெண்களுக்கு என்றால்..பெண்ணை படிக்க விடுகிறார்கள் இல்லை..அதற்கான காரணங்கள் என்ன என்று இத்தனைக்கும் பக்கம் பக்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்..!

இப்போ எல்லாம் பல்கலைக்கழகங்களில் பல பாடத்துறைகளிலும் பெண்கள் தான் அதிகம். இதனால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளில் பெண்கள் தான் பல உயர்பதவிகளை அலங்கரிக்கப் போகின்றனர். இதனால் ஆண்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக பெண்களால் நடத்தப்படக் கூடிய சூழல் உண்டு.

நீங்கள் நினைக்கிறாப் போல இல்லை..! ஆண்கள் பெண்களின் வளர்ச்சியில் காட்டும் அக்கறை போல..பெண்கள் ஆண்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டுபவர்களாக இல்லை. ஆண்கள் புறக்கணிப்படுவதை பெண்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. தங்கள் சுயநலத்துக்கும் சுயலாபத்துக்கும் சுகபோகத்துக்குமே பெண்கள் அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றனர். கேட்டால் அது எனது உரிமை எங்கின்றனர். ஆனால்..இதை ஆண் செய்தான் என்று வைச்சுக் கொள்ளுங்களேன்..பெண் புறக்கணிக்கப்படுகிறாள்..பெண்ணின் மீது ஆணுக்கு அக்கறையில்லை..அன்பில்லை...அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றான் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள்..!

எனவே மாறிவரும் சமூகப் போக்கில் ஆண்களின் வளர்ச்சி என்பது பெண்களுக்கு நிகராக பெண்களின் வளர்ச்சிப் போக்குக்கு சமாந்தரமாக அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அது எந்த வகையிலும் வீழ்ச்சியடைய அனுமதிக்க முடியாது. அப்படி இல்லாத போது புறக்கணிப்புக்கள் மூலமாக.. பெண்மேலாதிக்கத்துக்குள் ஆண்கள் அடிமைப்படுத்தப்படக் கூட வாய்ப்பிருக்கிறது..! அந்த வகையிலும்..ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் புரிந்துணர்வுகளை அதிகரிக்கும் நோக்கோடும்..ஆண்களின் பிரச்சனைகளும் கருத்துக்களும்..விசேடமாக தனித்து இனங்காட்டப் படவும்..பெண்களின் ஒத்துழைப்போடு..புரிந்துணர்வோடு..பரிகாரங்கள் தேடப்படவும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

சமூகத்தில் ஆண்களின் வீழ்ச்சி என்பது பெண்களின் எழுச்சி அல்ல..! ஆண்களின் வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த சமூகத்தினதும் வீழ்ச்சியாகவே நோக்கப்பட வேண்டும். பெண்களின் வீழ்ச்சி கடந்த காலங்களில் எப்படி சமூகத்தைப் பாதித்ததோ..அதே போல் ஆண்களின் வீழ்ச்சியும் சமூகத்தைப் பாதிக்கும். அது நடக்க முதலே ஆண்கள் தங்கள் உரிமைகளை திறமைகளை பெண்களுக்கு நிகராக பேண வேண்டியது அவசியமாகிறது. ஆண்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் இடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..! பெண்களுக்கு என்று மட்டும் ஒரு பக்கம் வழங்கும் பத்திரிகைகளில் இருந்து அது ஆரம்பிக்கப்பட வேண்டும்..!

இது வெறும் கூக்குரலில்ல..சமூகத்தில் ஆண்களின் கல்வித்தரம் மோசமான வீழ்ச்சியைக் கண்டுவரும் நிலையில்...ஆண்கள் வேலைத்தளங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் நிலையில்...மேலும் ஆண்கள் மெளனிகளாக இப்பதில் அர்த்தமில்லை. அதேபோல்..பெண்களுக்கும் ஆண்களின் சமூகப் பிரச்சனைகளை இனங்காட்ட வேண்டிய தேவையும்..ஆண்களின் வளர்ச்சிக்கு அவர்களும் அவர்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ள சூழலில்..இது முக்கியமாகிறது..!

ஆதார இணைப்பு..ஆங்கில மொழி மூலம்

"Employment

Men in full-time employment work an average of 41.9 hours per week compared to women's 37.6 hours per week. More men than women work. However the unemployment rate for men at 14% is currently about three times the female rate.

Traditional industries that have employed men are being closed such as mining and ship building. Nothing is being done to restore the wealth creating manufacturing industry, which would employ men.

Men also take on jobs that are hard, dangerous, and dirty. Industrial injuries at work are overwhelmingly of men. It is very rare to see women working as street cleaners or refuse collectors. These are the so called glass cellar jobs i.e. jobs that women seem not to want
"

Monday, February 13, 2006

காதலர் தின வாழ்த்துப்"பா"



இயையும் இரு மனங்கள்
இணைந்தோர் அரசமைக்க
அன்பு கோலோஞ்ச
ஆயுள் வரை
அகிலம் நடக்கட்டும்
அன்பின் வழி..!

தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு தான் பாட
தெவிட்டாத நினைவுகள்
மாசறப் பறக்கட்டும்
காதற் கொடியாய்
ஆட்சிக் கொடியாய்
வெண்கொடியாய்..!

காதல் நடக்கட்டும்
உண்மையாய்...
ஒருவன் ஒருத்திக்குள்
அதுவே...
புனிதம் என்றுமாகட்டும்..!

Sunday, February 05, 2006

சாதிகள் இல்லையடி பாப்பா.. உயர்வு தாழ்வு சொல்வது பாவம்.



பாரினில் தமிழன்
தான் ஓர் இனம்..!
மனுக்குல உண்மைகள்
மறந்தும் சிலர்
பார்ப்பர்ணியம் உச்சரித்தே
சாதிக்கத் துடிக்கிறார்
இன்னும் தமிழருள் பிரிவினைகள்..!
பெரியார் ஓதாமல்
ஓதிவைத்தான் வேற்றுமைகள்
சிறுமைகள் காட்டி
மதத்தால் ஒதுக்கி
பேசியது என்னவோ
"வேண்டாம் பிரிவினை"..!
உதாரணம் சொல்ல
ஒரு அம்பேத்கார்
யாரவர்..??!
கேள்விகள் முளைக்க
விடைகள் வரும்
"ஒடுக்கப்பட்டவர்"
இப்படித்தான் இன்னும்
அடையாளம் காவுகிறார் தந்திரமாய்..!

இன்னது இல்லையென்று
அத்தனையும் உச்சரிச்சு
மறைமுகமாய் அனைத்தும் காட்டி
சாதிக்க நிற்கின்றார் சிலர்..!
போடும் கோஷம் என்னவோ
"வேண்டாம் ஒழிப்போம்"..!
கேவலம்...
வேஷங்கள் கலைக்கா
கோமாளிகள் தாமென்ற
உண்மை உணரவில்லை அவரும்..!

தமிழனவன் திராவிடன்
தென்னகம் அவன் வாழ்நிலம்
வஞ்சிக்க வந்த அந்நியம் கண்டு
ஆரியம் திராவிடம் வகுந்து
கொண்ட வீரம் தொலைத்து
மருண்டதேனோ..?!
பிரிவினைகள் பாகுபாடுகள்
தந்ததென்று
இன்னும் வரலாறு வரைவதேனோ..?!
மறந்திட வேண்டியவை
மறுபடி வரலாற்றில்
மதிக்கப்படவும் வேண்டுமோ...?!
பார் இன்னும்
பார்ப்பர்ணியம் உச்சரிக்கும்
கூட்டம் இருக்குது...
பெரியார் வழியில்
வந்த சிறுமைகள் அவை
வாய் கிழிய உச்சரிப்பது
இன்னும் என்னவோ
வேற்றுமை தான்..!

பேடிகள்
இந்தக் குள்ளநரிகள்
கையறுத்து
அழிப்போம் மீளப்பதியும்
தந்திரச் சான்றுகள்..!
திராவிட உலகில்
தமிழன் ஓர் மனித இனம்
அதுவே உண்மை...
சாதித்து நின்று
கரம் கோர்ப்போம் ஓரணியில்
மற்றதுகள் மறுப்போம்..!

வடிவங்கள் மாறினும்
புரட்சியாய் தோன்றிலும்
பலரும் போதிப்பது என்னவோ
ஏற்றமும் தாழ்வும்..!
வேண்டாம் அது
இக்குஞ்சுகள் போல
தமிழரும் மனிதராகி
சமத்துவம் காணுவோம்
நமக்குள்ளேயே...!
வேண்டாத உச்சரிப்புகள்
தவிர்ப்போம்...
மறந்தவை மரிக்கட்டும்..
நிரந்தரமாய்..!

Wednesday, February 01, 2006

உலகின் செல்வந்த நகரம்.



கடந்த 14 ஆண்டுகளாக உலகின் செல்வந்தர் நகரமாக விளங்கிய ஜப்பானிய ரோக்கியோ நகரத்தை இரண்டாம் இடத்துக்கு நகர்த்தி விட்டு அந்த இடத்தை நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோ பிடித்துக் கொண்டு விட்டது. உலகில் 130 நகரங்களில் இருந்து அவற்றில் நிலவும் வாழ்க்கைச் செலவினத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 செல்வந்த நகரங்களும் கீழே தரப்படுகின்றன. 14 ஆண்டுகளுக்கு முதல் ஈரானிய தெகரான் நகரம் மிகச் செல்வந்த நகரம் என்ற இடத்தில் இருந்ததாம் இன்று அதுவே ஏழை நகரமாகியும் உள்ளது.

10 MOST EXPENSIVE CITIES

1st - Oslo, Norway
2nd - Tokyo, Japan
3rd - Reykjavik, Iceland
= 4th - Osaka, Japan
= 4th Paris, France
6th - Copenhagen, Denmark
7th - London, UK
8th - Zurich, Switzerland
9th - Geneva, Switzerland
10th - Helsinki, Finland


தகவல் ஆதாரம் இங்கு

Tuesday, January 31, 2006

ஹமாஸ் வெற்றி கிளப்பும் கேள்வி



இஸ்ரேலை நிர்மூலஞ் செய்வதைக் கொள்கையாகக் கொண்ட தீவிரவாத இயக்கமான ஹமாஸ் கடந்தவாரம் பாலஸ்தீன பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற உறுதியான வெற்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் நிலக் காட்சியை உலுக்கியிருக்கிறது. ஹமாஸ் கணிசமான எண்ணிக்கை ஆசனங்களைப் பெறும் என்று தேர்தலுக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பாலஸ்தீன சட்டப் பேரவையில் இந்த இயக்கம் அறுதி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றியடையும் என்று எவருமே எதிர்வு கூறியதில்லை.

132 ஆசனங்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 76 ஆசனங்களைக் ஹமாஸ் கைப்பற்றி பாலஸ்தீன அதிகார சபையை நிருவகிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது. இதன் மூலம் சுமார் 4 தசாப்தகாலம் பாலஸ்தீன மக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் மிகப்பெரிய அங்கத்துவ அமைப்பான பதாஹும் கொண்டிருந்த மேலாதிக்கம் முடிவுக்கு வருகிறது.

பாலஸ்தீன அதிகாரசபை ஹமாஸ் இயக்கத்தின் கைக்குவரப் போகின்றபோதிலும், யாசிர் அரபாத்தின் மறைவுக்குப் பிறகு பாலஸ்தீன ஜனாதிபதியாகத் தெரிவான மஹ்மூத் அப்பாஸ் தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போகிறார். இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்திடம் கண்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கும் பதாஹ் அமைப்பின் போராளிகள் வன்முறைகளில் இறங்கியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் ஹமாஸ் இயக்கம் எவ்வாறு செயற்படப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும். ஹமாஸைப் பொறுத்தவரை, அவ்வியக்கம் காசா பள்ளத்தாக்கிலும் மேற்கு ஆற்றங்கரையிலும் சமூக நலன்புரி அமைப்புகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மூலமாக பாலஸ்தீன மக்களுக்கு பயனுறுதியுடைய சேவையை வழங்கிய ஒரு சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. முன்னர் ஆட்சிசெய்யப்பட்ட பாணியில் இனிமேலும் தாங்கள் ஆட்சிசெய்யப்படுவதை விரும்பவில்லை என்பதை பாலஸ்தீனர்கள் தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள். அதிகாரத்துக்கு வரும் புதிய கட்சி நல்லாட்சியை வழங்குகின்ற அதேவேளை, இஸ்ரேலுடனான விவகாரங்களைக் கையாளுவதில் உறுதியுடன் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தையும் பாலஸ்தீன மக்கள் மீதான அதன் ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதில் சமரசத்துக்கு இடமில்லாத கொள்கையைக் கொண்ட - பெரும் பாலான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பான ஹமாஸ் இயக்கம் யூத அரசுடன் சமாதான சக வாழ்வைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை வெளிக்காட்டுமா? யூத அரசு மத்திய கிழக்கில் இருப்பதற்கான உரிமையை ஹமாஸ் அங்கீகரிக்குமா? பலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் காலஞ்சென்ற யாசிர் அரபாத்தும் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரே. ஆனால், பின்னர் 1988 இல் இஸ்ரேல் அரசு இருப்பதற்கான உரிமையை அவர் அங்கீகரித்ததுடன், 1990 களில் இஸ்ரேலுடன் இடைக்கால உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டார். அவ்வாறான ஒரு அடிப்படைக் கொள்கை மாற்றத்தைச் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் தயாராயிருக்குமா? அதிகாரப் பொறுப்புக்கு வருகின்ற அவ்வியக்கத்தின் அடுத்துவரும் நாட்களிலான கொள்கை நகர்வுகளே மத்திய கிழக்கின் சமாதானத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், ஹமாஸ் அதன் ஆயுதமேந்திய பிரிவை கலைக்க வேண்டுமென்றும் இஸ்ரேலை நிர்மூலஞ் செய்வதென்ற கொள்கையைக் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டிருந்தார். வன்முறைகளைக் கைவிடுவதற்கும் இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கும் மறுத்துவருகின்ற ஹமாஸ் நிலைப்பாடுகளின் காரணமாக, அவ்வியக்கத்தினால் நிருவகிக்கப்படக் கூடிய பாலஸ்தீன அதிகார சபையுடனான உறவுகளில் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென்று ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்திருக்கிறது.

காசா பள்ளத்தாக்கில் இருந்து கடந்த வருடம் வெளியேறியதைத் தொடர்ந்து மேற்கு ஆற்றங்கரையில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறினால், அந்நாட்டுடன் நீண்ட போர் நிறுத்தமொன்றுக்கு இணங்குவதற்கு தயாராயிருப்பதாகவும் ஆனால், அதன் இறுதி இலக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அதிகார சபைக்கும் பதிலாக இஸ்லாமிய அரசொன்றை ஏற்படுத்துவதே என்றும் தேர்தல் காலத்தில் ஹமாஸ் இயக்கம் நிலைப்பாட்டை விளக்கியிருந்தது. ஆயுதங்களும் ஆயுதப் போராட்டமும் ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய விவகாரங்கள். ஆக்கிரமிப்பு நீடிக்கும் வரை, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையையும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான உரிமையையும் பாலஸ்தீன மக்கள் கொண்டிருப்பர் என்று ஹமாஸ் தேர்தலுக்குப் பின்னரும் அறிவித்திருக்கிறது. ஹமாஸை தங்களது மத்திய கிழக்கு கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்புடையதான வகையில் வழிக்குக் கொண்டுவருவதற்கு பாலஸ்தீன அதிகார சபைக்கான பொருளாதார உதவிகளை ஒரு வெருட்டல் கருவியாக பயன்படுத்த மேற்குலகம் முனைந்து நிற்கிறது.

மத்திய கிழக்கில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜனநாயகத் தேர்தலொன்றின் மூலம் பாலஸ்தீன மக்கள் வெளிக்காட்டிய விருப்பத்தை எந்தவிதமாக மதிக்கப்போகின்றன அல்லது வியாக்கியானப்படுத்துகின்றன என்ற ஒரு முக்கியமான கேள்வி இன்று சர்வதேச சமூகத்திடம் விடை வேண்டி நிற்கிறது.

சூரியன்.கொம்

Monday, January 30, 2006

சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்



லண்டனுக்கு மேலாக இரண்டு விமானங்கள் மிக நெருக்கமாக பறப்பது போன்ற நிலையில் ஒரு புகைப்படக்காரர் புகைக்கப்படம் ஒன்றைப் பிடிக்க அதுவே பெரும் சர்ச்சையாகி விட்டது. இப்படி நெருக்கமாக விமானம் உண்மையில் பறந்திருந்தால் விபத்துக்கான சந்தர்ப்பம் அதிகம் என்பதாலே அது சர்ச்சைக்கு ஆளானது.

இருப்பினும் இப்புகைப்படம் இரு விமானங்களும் நெருக்கமாகப் பறப்பதாக தோற்றப்பாட்டைக் காட்டுகிறதே தவிர உண்மையில் இரண்டு விமானங்களுக்கும் இடையில் குறைந்தது 2.5 மைல் வேறுபாடு இருந்ததாக இவ்விமானங்களைக் கண்காணித்த விமானக்கட்டுப்பாட்டறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது..!

படம் மற்றும் தகவல் உதவி - bbc.com

அனுபவம்..!

பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!

Monday, January 23, 2006

தோப்பிருந்து ஒரு காவியம்



தோப்பிருந்து ஒரு காவியம்

குருவி ஒன்று தான் வாழ
தேடியது ஒரு தோப்பு
வந்தது மாந்தோப்பு
வரவினில் கண்டது
ஓர் மலர்
மலரிடை மலர்ந்தது
வாழ்வெனும் வசந்தம்
மலரதும் குருவியதும்
படைக்குது ஒரு காவியம்
அது...
மாநிலத்தில் மானிடர் தாம்
கண்டிடாத புனித காவியம்.

தோப்பருகே ஒரு குடிசை
அங்கும் வாழுது
ஒரு கூட்டம்..!
வஞ்சகமும் பொறாமையும்
அவர்தம் மனங்களில்
கறுவும் மனதை அடக்க முடியா
கலங்கி நிற்குது அவர் சித்தம்..!
கற்பனையில் கூட
அடுத்தவன் வீழ்ச்சியில்
அகம் மகிழவே துடிக்குது..!
பாவம் அவர்
அறிவிருந்தும்
அறியாமையில்...!

தோப்பிருந்த குருவியது
மனமிரங்கி
மலருடனிணைந்து
பாவப்பட்டவர் மீது
ரட்சிக்கிறது
மானிடா....
மனமதில் அமைதி கொள்
வாழ்வதில் சிறப்பாய்
மாற்றானை உன்னில் தரிசி
உன்னை மாற்றான் மதிப்பான்..!
அன்றி...
வாழ்வில் நீயே
உன்னை மிதிப்பாய்
உன் நினைவுகள்
ஓர் நாள்
உன் நிஜம் அழிக்கும்...!

Tuesday, January 17, 2006

வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!

வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!



பார் போற்றும் சிங்கமே
பரராஜ சிங்கமே
சிங்களச் சீமையில்
சிம்மக்குரலாய்
ஈழத்தமிழன் துயர் சொன்னவனே
இன்று ஈனத்தனத்துக்கு
இரையாகி வீழ்ந்தாயோ...??!

அகிலம் உன் ஆங்கிலத்துக்கு
அருவருக்காமல் செவிமடுக்கும்
அந்நியத்தனம் இன்றி
அனைவரையும் அரவணைக்கும்
அற்புத சீலன் நீ
அர்த்த ராத்திரியில்
கர்த்தரின் பூஜையில்
கருணையே அற்றவனின்
கருவிக்கு இலக்காகினையோ..??!

எத்தனை ஆண்டுகள்
ஈழ்த்தமிழரின் அகிம்சைக் குரலாய்
அகிலம் உற்று நோக்க
சிங்களப் பாசறை நடுவில்
சிங்காரத் தமிழனாய்
நடை பயின்றவன் நீ
சீண்டிப் பார்ப்பவன்
தூண்டலைக் கூட
தனித்து தாங்கியவன்
அணையாப் புன்னகையால்..!

வடக்கென்ன கிழக்கென்ன
தமிழ் தேசியத்தின்
உயிர் மூச்சாம்
உந்தன் உறவாம் ஈழத்தமிழன்
குருதி சொட்டினால்
ஈனக்குரல் செவி தட்டினால்
உடனே உறுமி எழுவாய்
நியாயம் கேட்டே வரிந்து நிற்பாய்
தாமதமின்றி உன் பணி செய்துகிடப்பாய்...!

உந்தன் குரலுக்கு
குலைநடுங்கிச் சிங்களம்
வைத்த விசாரணைக் கமிஷன் எத்தனை..!
உன் குரலுக்கு அடங்கிய
துப்பாக்கிகள் எத்தனை...!
சாக்குப்போக்கு உன்னிடம் பலிக்காது
தூய கரமும்
தூய உள்ளமும்
வணங்கா முடியும்
ஈழத்தமிழனின் குணமென்று
அரசியல் களத்தில்
சாதித்துக் காட்டிய
சாதனை நாயகன் நீ..!

கருவி தரித்த
சிங்களப் பாதுகாப்பு
சீ... என்று உதறியே
சொந்த மண்ணில்
மக்களுக்காய் மூச்சிழுத்தவன்..!
மூடர்கள் சிலரின்
முட்டாள் தனத்துக்கு
மூச்சையளித்தாயோ..??!
மூச்சிறைத்து விழுகிறோம்
உன் வீழ்ச்சி கண்டுமே
அநாதைகளாய்....!
வீரனே நீ மீண்டும் வா
மீண்டு வா
எம் ஆன்மா தந்து
அணை போடுகிறோம்...!


படம் - சங்கதி.கொம்

கூத்தடித்த கடலே விடை கொடு...!

கூத்தடித்த கடலே விடை கொடு...!



கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!

படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!


கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

Monday, January 16, 2006

யாரது சிந்திப்பது...??!

யாரது சிந்திப்பது...??!



வான்வெளி மீதினில் ஒரு பந்து
அதை வையகம் என்று கொண்டனர் மக்கள்
வழி வழி அது எங்கள் வாழிடம்
வாழ்ந்தும் போயின பல தலைமுறைகள்
இடையினில் வந்தன புரட்சிகள்
நன்மையும் தீமையும் விளைவுகளாயின..!

கரியமிலயும் காடழிப்பும்
காரிகை இதழ் பூச்சும் ஓசோன் படையழிவும்
கூட்டுச் சேர்ந்திட
வெப்பம் தாங்கிடா உருகும் பனிபோல்
கண்ணீரும் பெருகுது பல நோய்கள் கண்டு..!
நிம்மதி என்பதை பறிகொடுத்து
நிதமும் வீழ்கிறான் மனிதன் சுவடுகளாய்.!

கிண்டிக்கிண்டி பூமிப் பந்தும்
செழிப்பது இழக்குது
வளங்கள் அங்கு வறுமைக்குள் வீழ
வறுகி எடுப்பவர் வல்லரசுகள் ஆகி
வலிமை காட்டிட அழிவுக்கு ஆயுதங்கள் பெருக்குகிறார்...!
அகதியும் அலைச்சலும்
சனத்தொகை என்பதும் அபரிமிதமாக
அன்றாடம் வயிற்றுக்கு வழியின்றி
வறுமையில் வீழுது உயிர்கள்..!

அநாகரிகம் என்பது ஆட்சிப்பீடமேற
நாகரிகப் போர்வை அதுக்கு..!
சமத்துவம் என்பது இடறிய நிலையில்
நகரங்கள் எல்லாம் நரகங்களாகுது..!
புகையும் மதுவும் புன்னகைக்குது
மரணம்தனை வரவேற்க..!
வேர் விட்ட தளிர்களும் வெந்து வீழ்கின்றன
ஆழ ஊன்றிய
ஆணி வேர்களும் அறுபட்டுப் போகின்றன..!

மனங்கள் எல்லாம் அழுத்தம் தங்கிட
அமைதி என்பது இழந்து போகுது..!
ஆணும் பெண்ணும் அலைந்து விலங்குகளாய்
உணர்ச்சிக்கு அடிமையாகிட
கொடிய நோய்கள் தொற்றுக்களாகி
உடல்கள் அரிபடுகின்றன..!
சந்ததி என்பது
சரித்திரம் தொலைக்கிறது
தானும் சரிந்திட தற்கொலைக்கு வித்திடுகுது..!

யாரது சிந்துப்பது...
எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை
ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா
காலடி மிதிக்கும் பூமிப் பந்தை
காப்பது எப்படி சிந்திப்பாயா...??!
சந்திப்பாயா சவாலை..!